நளினியின் மனுவை இறுதி விசாரணைக்கு ஏற்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் வேலூர் ஆண்கள் மத்திய ஜெயிலிலும், ஆயுள் தண்டனை பெற்ற நளினி பெண்கள் ஜெயிலிலும் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் நளினி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:- மனுதாரர் (நளினி) கடந்த 23 ஆண்டுகளாக சிறை தண்டனையை அனுபவித்து வருகிறார். 2001-ம் ஆண்டில் இருந்து இதுவரை சுமார் 2,200 ஆயுள் தண்டனை கைதிகள் தமிழக அரசால் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர். ஆனால் மனுதாரர் தொடர்பான வழக்கை சி.பி.ஐ. விசாரித்த காரணத்தால் அவர் தமிழக அரசால் விடுதலை செய்யப்படவில்லை.

கடந்த பிப்ரவரி 19-ந் தேதி அன்று, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய மற்ற 6 ஆயுள் தண்டனை கைதிகளுடன் மனுதாரரையும் விடுவிக்க தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியது. தமிழ்நாடு அரசின் இந்த முடிவை எதிர்த்து மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. 25௪௨014 அன்று சுப்ரீம் கோர்ட்டில் 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு, இந்த வழக்கை 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டது.

தமிழ்நாடு அரசு, வேறு வழக்குகளில் தொடர்புடைய ஆயுள் தண்டனை கைதிகளை அவர்களின் நன்னடத்தையின் காரணமாக விடுதலை செய்ய முடிகிறது. ஆனால் குற்றவியல் நடைமுறை சட்டத்தின் 435(1)(ஏ) பிரிவின்படி சி.பி.ஐ. விசாரித்த வழக்குகளில் தண்டனை பெற்ற கைதிகளை மாநில அரசு விடுதலை செய்ய முடிவது இல்லை.

இந்த குறிப்பிட்ட பிரிவு, ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிக்கும் மாநில அரசின் அதிகாரத்தை தடுக்கிறது. ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிக்கும் வகையில் ஒவ்வொரு மாநிலத்திலும் பல்வேறு திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. எனவே, ஒரு வழக்கை சி.பி.ஐ. விசாரித்ததா? அல்லது மாநில போலீஸ் விசாரித்ததா? என்று பார்க்காமல் ஆயுள் தண்டனை கைதிகளின் விடுதலை விஷயத்தில் ஒரே மாதிரியான அளவுகோலை பயன்படுத்த வேண்டும்.

சிறையில் அடைக்கப்பட்ட பிறகு அனைத்து கைதிகளையும் சமமாக நடத்த வேண்டும். அரசாங்கத்தால் அளிக்கப்படும் சலுகைகள் அனைத்து கைதிகளுக்கும் சமமாக இருக்க வேண்டும். சி.பி.ஐ. வழக்குகளில் விசாரிக்கப்பட்டு சிறை தண்டனை பெற்ற ஆயுள் தண்டனை கைதிகள் மற்றும் மாநில போலீசால் விசாரிக்கப்பட்டு சிறை தண்டனை பெற்ற கைதிகள் என்ற பாகுபாடு இருக்கக்கூடாது. அரசு வழங்கும் சலுகைகள் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும். எனவே குற்றவியல் நடைமுறை சட்டத்தின் 435(1)(ஏ) பிரிவை நீக்குவதற்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனுவின் மீதான விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி எச்.எல்.தத்து மற்றும் நீதிபதிகள் மதன் பி.லோகுர், ஏ.கே.சிக்ரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்றது.

நளினி சார்பில் வக்கீல்கள் ராதாகிருஷ்ணன் மற்றும் பினோ பென்சிகர் ஆகியோர் ஆஜர் ஆனார்கள். மத்திய அரசின் சார்பில் வக்கீல்கள் சுஷ்மா சூரி மற்றும் மோகனா ஆகியோர் ஆஜர் ஆனார்கள்.

அப்போது வக்கீல் ராதாகிருஷ்ணன் வாதாடுகையில் கூறியதாவது:-

நளினி தன்னுடைய விடுதலைக்காக கோரிக்கை வைத்துள்ளார் என்று தவறாக புரிந்து கொண்டு இந்த வழக்கில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்து உள்ளது. ஆனால் நளினி சார்பில் முன்வைக்கப்படும் கோரிக்கை என்னவென்றால், சி.பி.ஐ. விசாரணையின் கீழ் கைதாகி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவருக்கும், மாநில அரசு விசாரணையில் கைதாகி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதிக்கும் நன்னடத்தை விடுதலை என்னும் பட்சத்தில் ஒரே மாதிரியான அளவுகோல் கடைப்பிடிக்க வேண்டும் என்பதுதான்.

ஆனால் சி.பி.ஐ. விசாரணையில் சிறையில் அடைக்கப்பட்ட கைதியை நன்னடத்தையில் விடுவிக்கும் பிரச்சினையில், மத்திய அரசின் ஒப்புதல் பெறவேண்டும் என்ற குற்றவியல் நடைமுறை சட்டத்தில் உள்ள பிரிவு 435(1)(ஏ) பாரபட்சமாக உள்ளது. ஒரே அறையில் அடைக்கப்பட்டுள்ள இரு ஆயுள் தண்டனை கைதிகளில் சி.பி.ஐ. விசாரித்த கைதிக்கும். மாநில அரசு விசாரித்த கைதிக்கும் இடையில் இதுபோன்ற பாரபட்சம் கடைப்பிடிக்கப்படுகிறது. எனவே இந்த சட்டப்பிரிவு நியாயமற்றது. எனவே இந்த சட்டப்பிரிவை நீக்க வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை.

இந்த வாதம் முடிவடைந்த பிறகு மற்ற இரு நீதிபதிகளுடன் ஆலோசனை நடத்திய தலைமை நீதிபதி எச்.எல். தத்து, இந்த மனுவை இறுதி விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்து உத்தரவிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply