வெளிநாட்டு கடன்தொகை 65 சதவீதத்தால் குறைப்பு : அமைச்சர் சரத் அமுனுகம
நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்திப் போக்கின் தொடர்ச்சியாகவே 2015 ஆம் ஆண்டிற்கான வரவு – செலவு திட்டத்தினை ஜனாதிபதியவர்கள் முன் வைத்துள்ள நிலையில் எதிர்க் கட்சியினர் அதனை ‘தேர்தல் வரவு – செலவு திட்டம்’ என விமர்சிப்பதனை ஏற்றுக் கொள்ள இயலாதென சிரேஷ்ட அமைச்சர் சரத் அமுனுகம நேற்று தெரிவித்தார். அபிவிருத்திக்காக வெளிநாடுகளிலிருந்து பெற்றுக் கொள்ளப்படும் கடன் விகிதாசாரமானது கணிசமானளவு குறைக்கப்பட்டுள்ள நிலையில் நாடு தொடர்ந்தும் கடனாளியாவதாக ஐக்கிய தேசியக் கட்சியினர் முன்னெடுத்து வரும் போலி பிரசாரங்களை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர் கூறினார்.
வெளிநாடுகளிலிருந்து பெற்றுக்கொள்ளப்படவுள்ள கடன் விகிதாசாரம் 2015 ஆம் ஆண்டில் 65 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டிய அமைச்சர் வருடாந்தம் வருமானத்திற்கும் செலவீனத்திற்குமிடையிலான பற்றாக்குறையினை குறைக்கவே அரசாங்கம் முயற்சிகளை முன்னெடுத்து வருவதாகவும் இம்முறை பற்றாக்குறை 4.6 சதவீதமெனவும் தெரிவித்தார். கொழும்பு – டார்லி வீதியிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று வரவு – செலவு திட்டம் குறித்து நடத்தப்பட்ட விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அமைச்சர் சரத் அமுனுகம தொடர்ந்தும் விளக்கமளிக்குகையில், மோதல்களைத் தொடர்ந்து கடந்த 05 வருடத்திற்குள் இலங்கை அபிவிருத்தியில் முன்னேற்றம் கண்டுள்ளது. உள்நாடு மற்றும் வெளிநாட்டிலிருந்து வந்த அனைத்து அழுத்தங்களையும் சவாலாக கொண்டு இந்த அரசாங்கம் மஹிந்த சிந்தனை. மற்றும் மஹிந்த சிந்தனை தொலைநோக்கு ஆகியவற்றை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்கிறது.
எமது நாடு கண்டிருக்கும் பொருளாதார ரீதியான அபிவிருத்தியை தெற்காசியாவே ஏற்றுக்கொண்டுள்ளது. இந்த வளர்சசியின் ஒரு முன்னேற்றப் படியாகவே 2015 ஆம் ஆண்டிற்கான வரவு – செலவு திட்டத்தை அரசாங்கம் முன்வைத் துள்ளது.
2015 ஆம் ஆண்டில் 8 சதவீத தேசிய உற்பத்தியை இலக்காக கொண்டு எமது அபிவிருத்திப் போக்குகள் முன்னெடுக்கப்படுகின்றன. 2010 ஆம் ஆண்டில் ஆயிரத்து 400 அமெரிக்க டொலர்களாகவிருந்த தனிநபர் வருமானமானது 2014 இல் 3 ஆயிரத்து 719 அமெரிக்க டொலர்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 2015 இல் தனிநபர் வருமானத்தை 4 ஆயிரம் அமெரிக்க டொலர்களாகவும் 2020 இல் 7 ஆயிரம் அமெரிக்க டொலர் களாகவும் அதிகரிப்பதே எமது இலக்கு ஆகும்.
ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி செலுத்திய காலப் பகுதியே இலங்கையில் மிகவும் குறைவான அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்ட காலப் பகுதியாகும். ஆனால் இன்று நாம் மத்திமமான அபிவிருத்தியை அடைந்துள்ளோம். 2017 அல்லது 2018 ஆம் ஆண்டை அடையும்போது மலேசியா. கொரியா போன்ற நாடுகளின் அபிவிருத்தி தரத்தை நாமும் அடைந்து விடுவோமென்ற நம்பிக்கை எமக் குள்ளது.
நாட்டின் 96 சதவீதமான மக்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. 94 சதவீதமான வீடுகளில் கடந்த 24 ஆம் திகதியன்று வரவு – செலவு திட்டத்தின் நேரடி ஒளிபரப்பினை காண முடிந்தது.
கடந்த 05 வருட காலமாக பணவீக்கம் அதிகரிக்காமல் அதனை கட்டுப்பாட்டில் வைத்திருந்த நிதியமைச்சு மற்றும் மத்திய வங்கிக்கு நாம் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம்.
வரலாற்றில் என்றுமில்லாதவாறு ஜனாதிபதியவர்களின் காலப் பகுதியிலேயே அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகின்றனர்.
2015 இல் இதன் மூலம் கிடைக்க கூடிய வருமானத்தை 10 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரிக் கவுள்ளோம்.
இந்த வகையில் எமது இலக்குகளை அடைவதற்கு ஏற்ற உந்து சக்தியாகவே நாட்டின் அனைத்து தரப்பினரையும் கருத்திற் கொண்டதாக இம்முறை வரவு – செலவு திட்டம் அமைந்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply