தமிழர்களின் அடையாளத்தை அழிக்கும் செயற்பாட்டிற்கு மாகாண சபை முட்டுக்கட்டை : மாவை சேனாதிராஜா
புலிகளை அழித்து விட்டோம் என கொண்டாடிய அரசாங்கம் இன்று புலம்பெயர் தமிழர்களை புலிகளாக சித்தரித்து தமது இனவாத அரசியலை மேற்கொள்கின்றனர். அபிவிருத்தி என்ற பெயரில் தமிழர்களின் அடையாளத்தினை அழிக்கும் செயற்பாட்டிற்கு வடமாகாண சபை இடம்கொடுக்காமையே அரசாங்கம் எம் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்துகின்றது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினரும் தமிழரசு கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
அரசாங்கத்தின் குற்றங்களை மறைக்கவே தமிழ் மக்களின் ஜனநாயக தீர்ப்பையும் மீறி வடக்கில் தமது ஆக்கிரமிப்பினை மேற்கொள்கின்றனர். வட மாகாண சபை மீதான அரசாங்கத்தின் குற்றச்சாட்டினை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
புலம்பெயர் மக்களின் தேவைக்கு ஏற்பவே வடமாகாண சபையின் செயற்பாடுகள் அமைகின்றது என அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ள நிலையில் இது தொடர்பில் வினவியபோதே மாவை எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்;
வடக்கு மக்களின் தேவைக்கேற்ப செயற்படாது உரிமைகளை தட்டிக்கழிப்பது வடமாகாண சபையா? அல்லது அரசாங்கமா? என்பது வடக்கு மக்கள் அனைவருக்குமே தெரியும். வடமாகாண சபைத் தேர்தலில் அனைத்து தமிழ் மக்களின் ஆதரவுடன் மாகாண சபையினை அமைத்துள்ளோம். அதேபோல் வடக்கு மக்களின் ஜனநாயக தீர்ப்பினை மீறி இந்த அரசாங்கம் தனது அதிகாரங்களை கையாள்கின்றது. யுத்த காலகட்டத்திலும் யுத்தத்திற்குப் பின்னரான இந்த ஐந்து ஆண்டுகளிலும் அரசாங்கம் மிகத் துரிதமாக தமது ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இராணுவ ஆக்கிரமிப்புக்கள், தமிழ் மக்களின் நிலங்களை சூறையாடுகின்றமை அது மட்டுமன்றி அபிவிருத்தி என்ற பெயரில் தமிழ் மக்களின் அடையாளத்தினை அழிக்கும் வகையில் சகல நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுக்கின்றது. அவற்றை தடுத்து தமிழ் மக்களை பாதுகாக்கும் வகையில் நாம் செயற்படுவதன் காரணத்தினாலேயே இந்த அரசாங்கம் எம்மீதான பொய்யான குற்றச் சாட்டுக்களை சுமத்துகின்றது.
விடுதலைப் புலிகளை அடியோடு அழித்து விட்டதாக ஐந்து ஆண்டு யுத்த வெற்றிக் கொண்டாட்டங்களை கொண்டாடும் அரசாங்கம் தற்போது புலம்பெயர் தமிழர்களை விடுதலைப் புலிகளாக சித்தரித்து தமது இனவாத அரசியலை ஆரம்பித்துள்ளனர். அரசாங்கத்திற்கு வட மாகாணம் மீதும், வடக்கில் மக்கள் மீதும் உண்மையான அக்கறை இருக்குமாயின் யுத்தத்தின்போது ஒரு இலட்சம் மக்கள் வெளி இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். இரண்டு இலட்சம் அளவில் மக்கள் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். அவர்களை மீண்டும் குடியமர்த்தியிருக்க முடியும். ஆனால் தமது ஆக்கிரமிப்புக்களை மேற்கொள்ளவே தமிழ் மக்களின் சிக்கலான சூழ்நிலைகளை கவனத்திற்கொள்ளாது செயற்படுகின்றனர். எனவே, அரசாங்கமும், அரசாங்கத்தில் இருந்து கொண்டு தூண்டிவிடுபவர்களின் பொய்யான குற்றச்சாட்டுக்களை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply