வைகோ மீதான பொடா வழக்கை முடித்துவைத்து நீதிமன்றம் உத்தரவு

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீதான பொடா வழக்கை முடித்து வைத்து, பூந்தமல்லியில் உள்ள பொடா சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. இதையடுத்து, 13 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கு முடிவுக்கு வந்தது. கடந்த 2002 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தெரிவித்து மதிமுக சார்பில் மதுரை, திருமங்கலத்தில் பொதுக் கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்று பேசிய மதிமுக பொதுச் செயலர் வைகோ உள்ளிட்ட 9 பேர் மீது பொடா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு பூந்தமல்லியில் உள்ள பொடா வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு நடைபெற்ற காலத்தில் வழக்கில் தொடர்புடைய இரண்டு பேர் இறந்துவிட்டனர்.

இந்தநிலையில் பொடா வழக்கு குறித்து மறு ஆய்வு செய்ய மத்திய அரசு குழு அமைத்தது.

இந்த மறு ஆய்வு குழுவின் பரிந்துரையின் பேரில் பொடா சட்டம் திரும்பப் பெறப்பட்டது. இதையடுத்து கடந்த 2004 ஆம் ஆண்டு வைகோ உள்ளிட்ட 7 பேர் மீதான பொடா வழக்கைத் திரும்பப் பெறக் கோரி தமிழ அரசு கோரிய மனுவை சிறப்பு நீதிமன்றம் நிராகரித்தது.

இதை எதிர்த்து வைகோ உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்து வந்த சென்னை உயர் நீதிமன்றம், கடந்த மாதம் வைகோ உள்ளிட்ட 7 பேர்  மீதான பொடா வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.

இதையடுத்து கடந்த 21 ஆம் தேதி, பூந்தமல்லியில் உள்ள பொடா சிறப்பு நீதிமன்றத்தில் வைகோ சார்பில் வழக்குரைஞர் தேவதாஸ், பொடா வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து வழங்கிய தீர்பின் நகலை வழங்கி, புதிய மனுவைத் தாக்கல் செய்தார். இந்த மனுவில் வைகோ மீதுள்ள பொடா வழக்கை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் முடித்து வைத்து உத்தரவிட வேண்டும் எனக் கூறினார்.

வழக்கை விசாரித்த நீதிபதி மோனி, உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை முழுமையாக படித்து ஆராய்ந்த பின், வழக்கை முடிப்பது குறித்து தெரிவிப்பதாக அறிவித்தார்.

இந்நிலையில் திங்கள்கிழமை வைகோ உள்ளிட்ட 7 பேர் மீது உள்ள பொடா வழக்கை முடித்து வைத்து நீதிபதி மோனி உத்தரவிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply