‘விடியும் போது நல்ல நல்ல விளையாட்டுக்களை காணலாம்’ வர இருப்போர் குறித்து மைத்திரி!

தான் தற்போதும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர், பொதுச் செயலாளர் என எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கட்சி உறுப்புரிமை மற்றும் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக கூறிய போதும் அவை சட்ட ரீதியில் நடைபெறவில்லை என இன்று ஹொரகொல்ல – பண்டாரநாயக்க சமாதி பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதித் தேர்தலுக்காக வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளதாகவும் பண்டாரநாயக்க ஜனன தினமான டிசம்பர் 8ம் திகதி நடைபெறும் தேர்தலில் வெற்றிபெற்று பண்டாரநாயக்க வழியில் செயற்படவுள்ளதாகவும் சமாதிக்கு அருகில் நின்று மைத்திரிபால சிறிசேன உறுதி அளித்தார்.

சிறிமாவோ பண்டாரநாயக்க காலத்தில் 17 வயது இளைஞனாக வாக்குபலம் இன்றி இருந்த காலத்திலேயே தனக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்புரிமை கிடைத்ததாகவும் கட்சியில் தனக்கு 47 வருடகால அனுபவம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, சந்திரிக்கா குமாரதுங்க உள்ளிட்ட தலைவர்கள், குழுக்கள் விடுத்த அழைப்பின் பேரில் பொது வேட்பாளராக போட்டியிட தான் முன்வந்தமை நாட்டின் தேசிய எதிர்பார்ப்புக்களை ஈடுசெய்யவே என மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.

தான் ஐக்கிய தேசியக் கட்சி அல்லது வேறு கட்சியுடன் இணையவில்லை என்றும் பொது வேட்பாளராக பொது எதிரணியில் போட்டியிடுவதாகவும் கூட்டணி அரசியல் தனக்குப் புதிதல்ல எனவும் அவர் கூறினார்.

தன்னோடு இணைவதாகக் கூறிய அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் எங்கே என்று சிலர் கேள்வி எழுப்பி வருவதாகவும் ´விடியும் போது நல்ல நல்ல விளையாட்டுக்களை காண முடியும்´ என்றே அவர்களுக்கு பதில் சொல்ல வேண்டியுள்ளதெனவும் நடக்க வேண்டியவை சரியான நேரத்திற்கு நடைபெறும் என்றும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply