ஜனநாயகத்தின் இருப்பிடமே இந்தியா “சார்க்” சவால்களை தோற்கடிப்போம் : மோடி
தெற்காசிய நாடுகளுக் கிடையிலான நல்லுறவுகளின் அவசியத்தை வலியுறுத்திய இந்திய பிரதமர் நரேந்திர மோடி கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதன் மூலம் வர்த்தகம், சுற்றுலாவையும் அதிகரிக்க வேண்டுமெனத் தெரிவித்தார். நேபாளத் தலைநகர் காத்மண்டுவில் நடைபெற்ற 18வது சார்க் உச்சிமாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். வறுமை, பயங்கரவாதத்தை ஒழிக்க பிராந்திய நாடுகள் ஒன்றுபட வேண்டும் என்றும் இந்திய பிரதமர் இதன் போது வலியுறுத்தினார்.
சார்க் மாநாட்டில் ஆங்கிலத்தில் பேசிய பிரதமர் மோடி, இந்தியாவின் கனவே தெற்காசியாவின் கனவு. சார்க் நாடுகள் இதுவரை செய்து வரும் சாதனைகள் போற்றுதலுக்குரியது. சர்வதேச அளவில் அண்டை நாடுகளுடன் சிறப்பான உறவு ஏற்பட வேண்டும் என்பதே எனது ஆசை. ஜனநாயகத்தின் இருப்பிடமாக இந்தியா திகழ்கிறது. பெரியதோ, சிறியதோ நாம் அனைவரும் ஒரே சவால்களை தான் எதிர்கொண்டு வருகிறோம்.
நாம் ஒவ்வொருவரும் மற்றவரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய உள்ளது. அனைத்து நாடுகளுடனும் நல்லுறவை தொடரவே இந்தியா விரும்புகிறது. எண்ணெய் நெருக்கடியை சரிசெய்ய மாலைத்தீவுகளுடன் விரைவில் சந்திப்பு ஏற்பாடு செய்யப்படும்.
மாநாட்டின் ஆரம்பத்தில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், அமைதி, வளம், வளர்ச்சி ஆகியவற்றின் பக்கம் பாகிஸ்தான் நிற்கிறது. இந்த மாநாட்டில் சுகாதாரம், கல்வி, பெண் உரிமை போன்ற முக்கிய பிரச்சினைகளை விவாதிக்க வேண்டும் நாம் ஒருவருடன் ஒருவர் சண்டையிட்டு கொள்வதற்கு பதிலாக, அனைவரும் ஒன்றிணைந்து வறுமை, ஊட்டசத்து குறைவு போன்ற பிரச்சினைகளை எதிர்த்து போராட வேண்டும். பிரச்சினைகள் இல்லாத தெற்காசிய நாடுகளை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
ஆப்கான் மண்ணில் இருந்து யாரும் மறைமுக போர் செய்வதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். ஆப்கானில் அமைதியை கொண்டுவர அரசு உறுதியுடன் உள்ளது என ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கானி தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, வேளாண்மை வளர்ச்சியே வறுமையை ஒழித்து வளர்ச்சியை ஏற்படுத்தக்கூடியதாகும். 2021 இல் நடுத்தர வருமானம் பெறும் நிலையை வங்கதேசம் எட்டும் என தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply