ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், பூடான் தலைவர்களை சந்தித்தார் மோடி
நேபாளத்தில் இரண்டு நாட்கள் நடைபெறும் 18-வது சார்க் மாநாட்டில் பங்கேற்க டெல்லியில் இருந்து புறப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி நேற்று தலைநகர் காத்மாண்டுவை வந்தடைந்தார். இன்று நடைபெற்ற சார்க் முதல் நாள் மாநாட்டில் பங்கேற்று பேசிய அவர், இதில் பங்கேற்க வந்துள்ள தெற்காசிய நாடுகளின் தலைவர்களையும் சந்தித்துப் பேசினார். பிரதமர் மோடி உள்பட சார்க் நாட்டு தலைவர்கள் அனைவரும் தங்கியுள்ள சோல்டீ ஹோட்டலில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது.ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கனியை சந்தித்தபோது, போரினால் பெரிய பாதிப்பை சந்தித்துள்ள அந்நாட்டுடனான உறவுகளை மேலும் பலப்படுத்த இந்தியா உறுதி பூண்டுள்ளது என்று மோடி தெரிவித்தார்.
அடுத்ததாக, வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினாவை சந்தித்த பிரதமர் மோடி, தெற்காசிய நாடுகளிடையே கூட்டுறவை அதிகரிப்பது தொடர்பாக விவாதித்தார்.
பின்னர், பூடான் பிரதமர் ட்ஷெரிங் டாப்கே-ஐ சந்தித்தபோது, வரும் 2015-ம் ஆண்டை அந்நாட்டின் வாசகர் ஆண்டாக அறிவித்துள்ளமையை தானும் ஆதரிப்பதாக தெரிவித்தார். வரும் ஜனவரி மாதம் குஜராத்தில் நடைபெறும் ‘முன்னேறிய குஜராத்’ விழாவுக்கு வருமாறும் டாப்கேக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
இதற்கு முன்னதாக, இன்று காலை சார்க் மாநாட்டின்போது இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவுடன் பேசிய மோடி, அந்நாட்டில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழக மீனவர்களின் தண்டனையை ரத்து செய்து, அவர்களை விடுவித்தமைக்கு ராஜபக்சேவுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.
ஆனால், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்பை மோடி சந்தித்துப் பேச மாட்டார் என்று ஏற்கனவே இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவித்திருந்த நிலையில், இன்று சார்க் மாநாட்டில் பங்கேற்க வந்த நவாஸ் ஷெரிப்புடனான தொடர்பை வெறும் கை குலுக்கலுடன் பிரதமர் மோடி நிறுத்திக் கொண்டது, குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply