மைனஸ் 61 டிகிரி குளிரில் நகராத விமானத்தை தள்ளிய பயணிகள்

நம் ஊரில், நடுவழியில் செயலிழந்து நிற்கும் பஸ்களை, அதில் பயணிக்கும் பயணிகள் கீழே இறங்கி தள்ளுவதை சர்வ சாதாரணமாக பார்த்து இருக்கிறோம். ஆனால், ரஷியா அருகே உள்ள சைபீரியாவில், இதே பாணியில், ஒரு விமானத்தை தள்ளி பயணிகள் உதவி செய்துள்ளனர். சைபீரியாவில் உள்ள இகர்கா நகரில் இருந்து கிரஸ்னோயர்ஸ்க் நகருக்கு சைபீரிய விமானம் ஒன்று புறப்பட தயாராக இருந்தது. அதில், 74 பயணிகள் இருந்தனர். அங்கு மைனஸ் 61 டிகிரி கடுங்குளிர் வீசி வருகிறது. இதனால் ஓடுபாதையே தெரியாத அளவுக்கு பனி மூடியிருந்தது. அந்த குளிரால், விமானத்தின் பிரேக் பகுதி உறைந்து விட்டது. இதனால், விமானம் இயங்க மறுத்து விட்டது. விமானத்தை கட்டி இழுத்துச் செல்லும் வாகனத்தையும் இயக்க முடியவில்லை.

இதையடுத்து, விமானத்தில் இருந்த 74 பயணிகளும் கீழே இறங்கி தள்ளுவது என்று முடிவானது. முரட்டு கோட்களை அணிந்திருந்த பயணிகள், நடுங்க வைக்கும் குளிரில் அந்த விமானத்தின் இறக்கைகளை பிடித்துக்கொண்டு, கூக்குரலிட்டபடியே தள்ளினர். விமானத்தை திருப்பும் அளவுக்கு சில மீட்டர் தூரம் விமானத்தை தள்ளினர். பிறகு, இழுவை வாகனம் பார்த்துக் கொண்டது. பழுது பார்ப்புக்கு பிறகு, விமானம் பறந்து சென்றது.

பயணி ஒருவர், இந்த காட்சியை வீடியோ படம் எடுத்து, அதை யூ டியுபில் வெளியிட்டதால், இந்த சம்பவம் வெளியே தெரிந்துள்ளது. வலைத்தளங்களில் பயணிகளுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. பயணிகள், விமானத்தை தள்ளுவதை படத்தில் காணலாம்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply