ஐ.நா. தீர்மானத்துக்கு எதிராக வாக்களிப்பு தூக்கு தண்டனைக்கு இந்தியா துணை போகலாமா? : கருணாநிதி
தூக்கு தண்டனைக்கு இந்தியா துணை போகலாமா? என்று கருணாநிதி கேள்வி எழுப்பி உள்ளார். இதுகுறித்து தி.மு.க.தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட, ‘கேள்வி-பதில்’ வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கேள்வி:- மரண தண்டனை குறித்து ஐ.நா.பொதுச் சபை முன் வைக்கப்பட்ட தீர்மானத்தை எதிர்த்து இந்தியா வாக்களித்துள்ளதே? பதில்:- 18 வயதுக்கு உட்பட்டவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், மனநலன் அல்லது அறிவுத் திறன் பாதிக்கப்பட்டோர் ஆகியோருக்கு மரணதண்டனை நிறைவேற்றுவதை உறுப்பு நாடுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என ஐ.நா. பொதுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
சமூக, மனிதாபிமான, கலாசார விவகாரங்களைக் கவனித்துவரும் ஐ.நா.வின் மூன்றாவது குழு இந்தத் தீர்மானத்தை வலியுறுத்தியது. இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக 114 நாடுகளும், எதிராக 36 நாடுகளும் வாக்களித்தன. 34 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்த 36 நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
இந்தியக் குடியரசின் முன்னாள் தலைவரும், தத்துவமேதையுமான டாக்டர் ராதாகிருஷ்ணன், “மரண தண்டனை தேவையில்லை” என்று வெளிப்படையாகத் தெரிவித்ததோடு, அவர் குடியரசுத் தலைவராக இருந்த காலம் வரை குற்றவாளிகள் மீதான மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை.
குற்றங்கள் ஒழிக்கப்படுவதற்கு மன மாற்றம் தேவை. அதற்குத் தூக்கு தண்டனை உரிய தீர்வாகாது என்று, 2014 பிப்ரவரி 15 மற்றும் 16 ஆகிய நாட்களில், திருச்சியில் நடைபெற்ற தி.மு.க.வின் 10-வது மாநில மாநாட்டில், லட்சோப லட்சம் மக்களின் பேராதரவோடு, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தியாவில் பல்வேறு தரப்புகளிலிருந்தும் தூக்கு தண்டனை சட்ட ரீதியாக நீக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை, தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்து, தூக்குதண்டனையைச் சட்ட நூலிலிருந்து அகற்றிட முன்வருவதோடு; “மரணதண்டனை நிறைவேற்றப்படுவதை நிறுத்திவைக்கவேண்டும்” என்று தற்போது ஐ.நா. பொதுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை இந்தியா எதிர்த்தது என்பதைப் போன்ற நிகழ்வு எதிர்காலத்தில் ஏற்படாதவண்ணம் மனிதாபிமானம் மற்றும் மனித உரிமைகள் அடிப்படையில், முடிவுமேற்கொள்ளவும் வலியுறுத்துகிறேன்.
கேள்வி:- கிரானைட் குவாரி முறைகேடு குறித்து, சகாயம் முதலில் மதுரையில் விசாரணை நடத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறதே?
பதில்:- மதுரையில் நடந்த கிரானைட் குவாரிமுறைகேட்டை முதலில் விசாரிக்க வேண்டும். பின்னர், படிப்படியாக தமிழகத்தின் பிற மாவட்டங்களில் நடந்துள்ள கனிமவள முறைகேடு குறித்து விசாரிக்கலாம் என்று விசாரணைக் கமிஷன் அதிகாரியான சகாயத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆனால், வெளிவந்துள்ள செய்தியின்படி, ‘ கிரானைட் முறைகேட்டில் ஈடுபட்ட குவாரி உரிமதாரர்களுக்கு அபராதம் விதிக்க மதுரை முன்னாள் கலெக்டர் அன்சுல் மிஸ்ரா, 2013 ஜனவரி 3-ந் தேதி, முதல் நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்தினார். மூன்று மாதம் விசாரணை நடந்தநிலையில், அதை எதிர்த்து 61 பேர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அங்கு அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டன. இதனால் தற்போது மீண்டும் அந்த குவாரி உரிமதாரர்களுக்கு அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காகக் குவாரி உரிமதாரர்கள் 86 பேருக்கும் தற்போதைய மதுரை கலெக்டர் சுப்பிரமணியன் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். இந்த நோட்டீஸ் மீது முதல் கட்ட விசாரணை வரும் டிசம்பர் 3-ந் தேதி முதல் தொடங்குகிறது. முதல் கட்டமாகக் குவாரி உரிமதாரர்கள் 11 பேரிடம் விசாரணை நடக்கிறது. முறைகேடு நிரூபணமானால், அவர்களுக்கு நேரடியாக அபராதம் விதிக்கப்படும்.
கிரானைட் முறைகேடு தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கும் பொருட்டு சகாயம் குழு மதுரை மாவட்டத்திற்கு வர உள்ளநிலையில், மதுரை கலெக்டர் குவாரி உரிமதாரர்களுக்கு அபராதம் விதிக்கும் நடவடிக்கையைத் தொடர்வது என்பது முரண்பாடாக ஆகிவிடாதா? அபராதம் விதிக்க முடிவானதற்குப் பிறகு, சகாயம் குழு சமர்ப்பிக்கும் அறிக்கையில் என்ன நடவடிக்கை எடுக்க முடியும்? முறைகேடு குறித்த நடவடிக்கைகள் நீர்த்துப் போய்விடாதா? என்று மதுரை மக்கள் வியப்பில் ஆழ்ந்திருக்கிறார்கள்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply