சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், தேனி மண்டல தேர்தல் பொறுப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் நியமனம்

அ.தி.மு.க. அமைப்புகளுக்கான தேர்தல் டிச.11-ந்தேதி முதல் அடுத்த ஆண்டு ஏப்.25-ந்தேதி வரை 14 கட்டங்களாக நடைபெறும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான ஜெயலலிதா நேற்று முன்தினம் அறிவித்தார். இந்தநிலையில் அ.தி.மு.க. அமைப்பு தேர்தலுக்கான மண்டல, மாவட்ட மற்றும் பிற மாநிலங்களுக்கான தேர்தல் பொறுப்பாளர்களை ஜெயலலிதா நியமித்துள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அ.தி.மு.க.வின் அனைத்து நிலைகளுக்குமான அமைப்பு தேர்தல்களை நடத்துவதற்கு ஏதுவாக, மண்டலத்தேர்தல் பொறுப்பாளர்கள், மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள், பிற மாநிலங்களுக்கான தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, வடசென்னை வடக்கு, தெற்கு, தென்சென்னை வடக்கு, தெற்கு, காஞ்சீபுரம் கிழக்கு, மத்தியம், மேற்கு, திருவள்ளூர் கிழக்கு, மேற்கு, தேனி ஆகிய மாவட்டங்களுக்கு மண்டல தேர்தல் பொறுப்பாளராக முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர்-பொருளாளருமான ஓ.பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டவர்கள் விவரம் பின்வருமாறு:-

அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளரும், தமிழ்நாடு வக்பு வாரியத்தலைவருமான அ.தமிழ்மகன் உசேன் (தென்சென்னை வடக்கு), அ.தி.மு.க. தேர்தல் பிரிவுச்செயலாளர்-திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளர், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை துணைத்தலைவருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் (தென் சென்னை தெற்கு), அ.தி.மு.க. விவசாயப்பிரிவு செயலாளரும், தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரிய தலைவருமான கு.தங்கமுத்து (வடசென்னை வடக்கு), தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி எஸ்.டி.கே.ஜக்கையன் (வடசென்னை தெற்கு), அ.தி.மு.க. வக்கீல் பிரிவு செயலாளரும், மாநிலங்களவை குழு தலைவருமான ஏ.நவநீதகிருஷ்ணன் எம்.பி., மற்றும் கோவை புறநகர் மாவட்ட செயலாளருமான நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் (காஞ்சீபுரம் கிழக்கு), திருப்பூர் மாவட்ட செயலாளரும், வனத்துறை அமைச்சருமான எம்.எஸ்.எம். ஆனந்தன் (காஞ்சீபுரம் மத்தியம்), திருச்சி மாவட்ட செயலாளரும், அரசு தலைமை கொறடாவுமான ஆர்.மனோகரன் (காஞ்சீபுரம் மேற்கு), அமைப்பு செயலாளர் சி.பொன்னையன் (திருவள்ளூர் கிழக்கு), மீனவர் பிரிவு செயலாளர் கே.கே.கலைமணி மற்றும் புரட்சி தலைவி பேரவை துணை செயலாளர் பி.ஆர்.நம்பிராஜ் (திருவள்ளூர் மேற்கு) ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர்.

அ.தி.மு.க. அமைப்பு தேர்தல்கள் சுமுகமாக நடைபெறும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள பொறுப்பாளர்களுக்கு அ.தி.மு.க.வினர் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply