திஸ்ஸ அத்தநாயக்க வெளியேறியமை வருத்தமளிக்கின்றது:ரணில்
ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து திஸ்ஸ அத்தநாயக்க வெளியேறியமை வருத்தமளிக்கின்றது. ஆயினும் அதை விடவும் முக்கியத்துவம் மைத்திரிபால சிறிசேனவின் வெற்றியில் தங்கியிருக்கின்றது. பொது எதிரணியாக செயற்படும் போது தனி நபர் தொடர்பில் அக்கறைப்பட அவசியம் இல்லை என தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்றில் இருந்து ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக கபீர் ஹாசிம் செயற்படுவார் எனவும் குறிப்பிட்டார்.எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்தில் நேற்று பொது எதிரணியினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது
ஆட்சி மாற்றத்தினை எதிர்பார்த்து அனைவரும் களத்தில் இறங்கியுள்ளோம். பல விட்டுக் கொடுப்புகள் எதிர்பார்ப்புகளின் மத்தியில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம். இவ்வாறான சந்தர்ப்பங்களின் மத்தியில் காட்டிக் கொடுப்புக்களும் கால் வாறல்களும் இடம்பெறுவது எதிர்பார்க்கும் ஒன்றே. ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக செயற்பட்ட திஸ்ஸ அத்தநாயக்க இன்று கட்சியினை விட்டு வெளியேறியுள்ளார். இந்நிலையில் அவரின் இராஜினாமா கடிதத்தினை நான் பெறவில்லை. ஐக்கிய தேசியக் கட்சியை விட்டு திஸ்ஸ வெளியேறியமை எமக்கு வருத்தமளிக்கின்றது.
எனினும் தற்போது நாம் தனி நபரை நினைத்து கவலைப்படுவது அர்த்தமற்றது. எமக்கு தற்போதைய தேவை மைத்திரிபால சிறிசேனவை வெற்றி பெற வைப்பதே. அதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியுள்ளது. எனவே பொது எதிரணியின் வெற்றிக்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். அதேபோல் இன்றில் இருந்து ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் கபீர் ஹாசீம் செயற்படுவார். தொடர்ந்து வரும் தினங்களில் இவரின் செய்தியாளர் சந்திப்புக்களால் ஏனைய செயற்பாடுகளை அறிந்து கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply