தமிழக மீனவர்களை கைது செய்யும் இலங்கையை இந்தியா எச்சரிக்க வேண்டும்: ராமதாஸ் அறிக்கை

பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–வங்கக்கடலில் கோடியக்கரைக்கு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த நாகை மற்றும் காரைக்கால் மாவட்டங்களை சேர்ந்த 43 மீனவர்களை சிங்களப்படையினர் நேற்று கைது செய்துள்ளனர். இந்த மீனவர்களுக்கு சொந்தமான 5 படகுகளையும் சிங்களப்படையினர் பறிமுதல் செய்து வைத்துள்ளனர்.போதை மருந்து கடத்தியதாக கூறப்பட்ட பொய்யான குற்றச்சாற்றின் அடிப்படையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 5 பேரை சிங்கள அரசு விடுதலை செய்யப்பட்ட பிறகு, இரண்டாவது முறையாக தமிழக, புதுவை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த நவம்பர் 23 ஆம் தேதி ராமேஸ்வரம் மற்றும் ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த 14 மீனவர்கள் 3 விசைப்படகுகளுடன் கைது செய்யப்பட்டனர்.
அதைத் தொடர்ந்து கோடியக்கரை பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த நாகை மற்றும் காரைக்கால் மாவட்டங்களை சேர்ந்த 43 மீனவர்களும் அவர்களின் 5 படகுகளும் பிடித்து செல்லப்பட்டிருக்கின்றன. இந்த இரு சம்பவங்களும் இந்திய கடல் எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்துள்ளன. இலங்கை படையின் இந்நடவடிக்கைகள் கடுமையாக கண்டிக்கத்தக்கவை.

இலங்கை அதிபர் இராஜபக்சே இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் நிலையிலும், தமிழக மீனவர் பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்திற்கு வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பதிலளித்துக்கொண்டிருந்த நிலையிலும் இந்த அத்துமீறலை இலங்கைப்படைகள் நடத்தியிருக்கின்றன.

அப்படியென்றால், மீனவர்கள் பிரச்சினையில், இந்திய அரசை இலங்கை எந்த அளவுக்கு மோசமாக மதிக்கிறது என்பதை இந்த உதாரணங்களிலிருந்து அறிந்து கொள்ள முடியும். இனியும் ஒருமுறை தமிழக மீனவர்களை சிங்களப்படை கைது செய்யாமல் இருக்க வேண்டும் என்றால், இராஜபக்சே கும்பலுக்கு வாழ்வில் மறக்க முடியாத அளவுக்கு பாடம் கற்பிக்க வேண்டும்.

ஆனால், மத்திய அரசும், மாநில அரசுகளும் என்ன செய்து கொண்டிருக்கின்றன. தமிழக மீனவர்களுக்கு சொந்தமான 79 படகுகளை பறிமுதல் செய்து வைத்துக்கொண்டு 6 மாதங்களுக்கும் மேலாகவும், 38 மீனவர்களை கைது செய்து 3 வாரங்களுக்கு மேலாகவும் இலங்கை அரசு விடுவிக்க மறுத்துவரும் நிலையில், அந்த நாட்டின் கொலைகார அதிபர் மீண்டும் வெற்றி பெற இந்தியப்பிரதமர் வாழ்த்து தெரிவிக்கிறார்.

ஒட்டுமொத்த தமிழகத்தின் எதிர்ப்பையும் மீறி திருப்பதி கோவிலில் அக்கொடியவனுக்கு முழுக்குடமரியாதை அளிக்கப்படுவதற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்கிறது. மத்திய அரசின் நிலை இப்படியென்றால் தமிழக அரசோ மீனவர்களின் உரிமைகளை பாதுகாக்காமல் உறங்கிக்கொண்டிருக்கிறது.

மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக கடந்த மூன்றரை ஆண்டுகளில் முந்தைய முதல்–அமைச்சர் ஜெயலலிதா 57 முறையும், இப்போதைய முதலமைச்சர் நான்கு முறையும் பிரதமருக்கு கடிதம் எழுதியும் மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படவில்லை. இத்தகைய சூழலில் அதிரடியான அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பதிலாக மீண்டும், மீண்டும் கடிதம் மட்டும் எழுதினாலே கடமை முடிந்துவிட்டது என்று தமிழக அரசும், முதலமைச்சரும் கருதுகிறார்கள்.

இந்தியப்பிரதமராக இந்திராவும், தமிழக முதல்–அமைச்சராக எம்.ஜி.ஆரும் இருந்த போது இலங்கைக்கு பலமுறை அதிர்ச்சி வைத்தியங்களை தந்திருக்கிறார்கள். அதேபோன்ற அணுகுமுறையை மீண்டும் கையிலெடுக்க வேண்டிய காலம் இப்போது மீண்டும் வந்திருக்கிறது.

எனவே, இப்போது கைது செய்யப்பட்ட மீனவர்கள் உட்பட இலங்கை சிறையில் வாடிக்கொண்டிருக்கும் 81 மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்டிருக்கும், 84 படகுகளையும் விடுவிக்க வேண்டும்; இனியும் தமிழக மீனவர்களை கைது செய்யாமல் இருக்க வேண்டும் என்று இலங்கை அரசை இந்தியா எச்சரிக்க வேண்டும்.

அவ்வாறு செய்ய இலங்கை மறுத்தால், தமிழக முதலமைச்சர் தில்லியில் முகாமிட்டு, அந்த நாட்டுக்கு எதிராக அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply