பாகிஸ்தானிலிருந்து பாரீஸ் வரை பயங்கரவாதத்தை ஒடுக்குவோம் :அதிபர் ஒபாமா

பாகிஸ்தான் முதல், பாரீஸ் நகரம் வரை பரவியிருக்கும் பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டவிருப்பதாக அமெரிக்க அதிபர் ஒபாமா, புதன்கிழமை நிகழ்த்திய நாடாளுமன்ற உரையில் சூளுரைத்தார். அமெரிக்க நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டு அமர்வில், அந்த நாட்டு அதிபர் ஆண்டுதோறும் உரையாற்றுவது வழக்கம். நாட்டின் நிலவரம், எதிர்காலத் திட்டங்கள், கொள்கைகள் போன்றவை குறித்து இந்த உரையின்போது அமெரிக்க அதிபர் மக்களிடம் விவரிப்பார். இந்த நிலையில், அதிபர் ஒபாமா புதன்கிழமை நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை:

பாகிஸ்தான் பள்ளியிலிருந்து, பாரிஸ் நகர வீதிகள் வரை உலகின் எந்தப் பகுதியிலும் பயங்கரவாதத்தால் மக்கள் பாதிக்கப்படும்போது, அமெரிக்கா அவர்கள் பக்கம் நிற்கிறது.

பயங்கரவாதிகளை ஒழித்துக் கட்டவும், அவர்களது தொடர்புகளைத் துண்டிக்கவும் அமெரிக்கா தொடர்ந்து போராடும்.

இந்தப் போராட்டத்தில் தன்னிச்சையாக ஈடுபடும் உரிமையை அமெரிக்கா தொடர்ந்து தக்கவைக்கும்.

நான் அதிபர் பதவியை ஏற்றது முதல், அமெரிக்காவுக்கும், கூட்டணி நாடுகளுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் பயங்கரவாதிகளை வேரறுக்கும் முயற்சியில் அயராது ஈடுபட்டு வருகிறோம்.

இராக், ஆப்கானிஸ்தானில் படிப்பினை: எனினும், இராக், ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கு ராணுவத்தினரை அனுப்பியதன் மூலம் பல படிப்பினைகள் நமக்குக் கிடைத்துள்ளன.

அதன் அடிப்படையில், மிகப் பெரிய படைப் பிரிவுகளை அனுப்புவதற்குப் பதிலாக, தெற்கு ஆசிய, வட ஆப்பிரிக்க நாடுகளுடன் கூட்டணி அமைத்து, பயங்கரவாதத்துக்கு எதிராகப் போராட முடிவு செய்துள்ளோம்.

அந்த நாடுகளின் உதவியுடன், பயங்கரவாதிகளுக்குப் புகலிடம் கிடைப்பதைத் தடுப்பதன் மூலம் அவர்களால் அமெரிக்காவுக்கு ஏற்படும் அச்சுறுத்தலைத் தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம்.

ஐ.எஸ். பயங்கரவாதம்: இராக்கிலும், சிரியாவிலும் அமெரிக்கா கையாண்டு வரும் ராணுவ உத்திகளின் காரணமாக அங்கு ஐ.எஸ். பயங்கரவாதிகளின் முன்னேற்றம் தடைபட்டுள்ளது.

முஸ்லிம்கள்: உலகில் யூதர்கள் மீதான வெறுப்பு தலைதூக்குவது மிகவும் கண்டிக்கத்தக்கது. அதே நேரம், முஸ்லிம்கள் அனைவரையும் ஒரே மாதிரியாக சித்தரிப்பதும் தவிர்க்கப்பட வேண்டும்.

மிகப் பெரும்பாலான முஸ்லிம்கள் அமைதியே விரும்புகின்றனர் என்றார் ஒபாமா.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply