குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு 55,000 வீடுகள் அமைக்கும் திட்டம் : அமைச்சர் சஜித் பிரேமதாச 

அரசாங்கத்தின் நூறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் 55,000 வீடுகளை நிர்மாணிக்கும் செயற்திட்டம் ஆரம்பிக்கப் படவுள்ளதாக வீடமைப்பு, சமுர்த்தி அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நாட்டிலுள்ள 160 தேர்தல் தொகுதிகளையும் உள்ளடக்கியதாக குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 50,000 வீடுகள் நிர்மாணித்து வழங்கப்படுவதுடன் மேலும் 5000 வீடுகள் குடிசைகளில் வாழும் மக்களுக்காக நிர்மாணிக்கப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். இந்த வீடமைப்பு செயற்திட்டங்களுக்காக 5.3 பில்லியன் ரூபாவை செலவிடவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்த வீடமைப்புத் திட்டத்துக்கு மேலதிகமாக ஒரு கிராமத்துக்கு ஒரு திட்டம் என்ற செயற்திட்டத்தின் கீழ் 36,000 கிராமங்களில் கிராமத்திற்கு ஒரு மில்லியன் என்ற ரீதியில் 36,000 மில்லியன் ரூபாவை முதலீடு செய்யவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். சமூக பங்களிப்புடன் மேற்கொள்ளப்படும் இச் செயற்திட்டத்திற்கு முழுமையாக 43,000 மில்லியனை முதலீடு செய்யவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

புதிய வீடமைப்பு, சமுர்த்தி அமைச்சரான சஜித் பிரேமதாச நேற்று பத்தரமுல்லை செத்சிறிபாயவில் உள்ள அமைச்சில் தமது கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றார்.

அமைச்சர்கள் பிரதியமைச்சர்கள், ஆதரவாளர்கள், குடும்பத்தினர் அமைச்சு அதிகாரிகள் மற்றும் மதத் தலைவர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வில் தமது கடமைகளை பொறுப்பேற்று உரை யாற்றிய அமைச்சர் தொடர்ந்தும் தெரிவித்ததாவது,

வீடில்லாதவர்களுக்கு வீடுகளைப் பெற்றுக் கொடுக்கவும் குறிப்பாக கிராமிய பிரதேசங்களிலுள்ள மக்களுக்கு வீடுகளை நிர்மாணித்துக் கொடுப்பதுடன் சமுர்த்தி அமைச்சின் மூலம் வறுமை நிலையிலுள்ள மக்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்பவும் முக்கியமான இரண்டு அமைச்சுக்கள் எனக்கு பொறுப்புத் தரப்பட்டுள்ளன.

நாடளாவிய ரீதியில் நிர்மாணிக்கப் படவுள்ள 50,000 வீடுகளுக்கு தலா ஒரு இலட்சம் ரூபா வீதம் நிதி வழங்குவதுடன் அரச, அரச சார்பற்ற மற்றும் சமூக அமைப்புகளின் பங்களிப்போடு ஒவ்வொன்றும் ஆறு இலட்சம் பெறுமதியான வீடுகள் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிர்மாணித்து வழங்கப்படவுள்ளன.

அரசாங்கத்தின் நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ் இந்த வீடமைப்புத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடத்தில் இத்திட்டத்தை நிறைவு செய்வதே எமது நோக்கம்.

எனது தந்தையார் ஆர். பிரேமதாச நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் தம்மையே தியாகம் செய்தவர். 365 நாட்களும் 24 மணித்தியாலங்கள் மக்கள் சேவை செய்தார். விடியற்காலை 4.00 மணி முதலே தமது பணிகளை ஆரம்பித்து விடுவார். அதனால் அவரது காலத்தில் நாட்டில் பாரிய அபிவிருத்தி இடம்பெற்றது.

அடிமட்ட நிலையிலுள்ளவர்களுக்கு மதிப்பளித்து அவர்களுக்கு சேவைசெய்ய வேண்டும் என்பதை எனக்குப் பழக்கிய முன்னுதாரணமான தலைவர் அவர். வறுமையை ஒழிக்க அவர் அர்ப்பணிப்புடன் அயராது உழைத்தார்.

புதிய அரசாங்கத்தில் ஜனாதிபதியும், பிரதமரும் எனக்கு பொறுப்பு வாய்ந்த அமைச்சை வழங்கியுள்ளனர். எனது தந்தையாரை முன்னுதாரணமாகவும் அவரது செயற்பாடுகளைப் படிப்பினை யாகவும் கொண்டு குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு வீடுகளைப் பெற்றுக் கொடுக்கவும் வறுமை நிலை மக்களை கைதூக்கி சொந்தக்காலில் நிறுத்தவும் நான் அர்ப்பணிப்புடன் உழைப்பேன்.

வீடமைப்புக் கடன்களைப் பெற்று அதனை மீள செலுத்த முடியாதளவுக்கு வறுமை நிலையிலுள்ள குடும்பங்களுக்கு வீடமைப்பு உதவியாக 75,000 ரூபா வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 15,000 வீடுகளை நிர்மாணிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ‘திவி நெகும’ நிதியில் 376 மில்லியன் செலவில் 5,000 வீடுகளை நிர்மாணிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply