தேர்தல் முறை மாற்றத்துடனேயே ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்படவேண்டும் : நிமல் சிறிபால டி சில்வா

தேர்தல் தொகுதிகளை நிர்ணயிப்பதற்கு மூன்று மாத காலம் தேவைப்படுவதாகத் தேர்தல் ஆணையாளர் அறிவித்துள்ளதால் அரசாங்கம் துரிதமாக தேர்தல் தொகுதி நிர்ணய குழுவை நியமித்து கலப்பு தேர்தல் முறையின் கீழ் அடுத்த பொதுத் தேர்தலை நடத்த வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா கோரியுள்ளார். ஜனாதிபதி நிறைவேற்று அதிகாரத்தை குறைப்பதற்கே ஐ.தே.க. அவசரப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், ஜனாதிபதி அதிகாரத்தைக் குறைக்கும் சட்டமூலமும் தேர்தல் முறைமாற்றுவது தொடர்பான சட்டமூலம் தனித்தனியாகக் கொண்டு வரப்பட்டால் அதனை தமது கட்சி எதிர்க்கும் என்றும் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டாலும் பாதுகாப்பு காணி, பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் தொடர்ந்தும் ஜனாதிபதியின் கீழ் இருக்க வேண்டும் எனவும் அரசியலமைப்பை திருத்துவதற்கான ஒத்துழைப்பிலிருந்து சுதந்திரக் கட்சி ஓரமாகாது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஊடகவியலாளர் மாநாடு நேற்று சு.க. தலைமையகத்தில் நடைபெற்றது. அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர் மேலும் கூறியதாவது,

அரசியலமைப்புத் திருத்தம் குறித்து நாம் தொடர்ந்து ஆராய்ந்து வருகின்றோம். அதற்கு எமது ஒத்துழைப்பு வழங்குவோம். அதிலிருந்து ஒதுங்க மாட்டோம். எமது நிலைப்பாட்டைத் தெளிவாகக் கூறியுள்ள தோடு அதில் இருந்து மாறமாட்டோம். பாராளுன்றத்தைக் கலைக்கும் ஜனாதிபதியின் அதிகாரத்தை நீக்குதல் அமைச்சர்களை நியமிக்கும் அதிகாரத்தை பிரமதமருக்கு வழங்குதல் போன்ற மாற்றங்களுக்கு நாம் ஆதரவு வழங்கத் தயார்.

தேர்தல் முறை மாற்றத்துடனே ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப் படவேண்டும். தனித் தனியாக அதனை மேற்கொள்வதை ஏற்க முடியாது. எமது 120 வாக்குகளும் இன்றி எந்த மாற்றமும் செய்ய முடியாது. தேர்தல் முறை மாற்றம் குறித்து தேர்தல் ஆணையாளரின் பங்களிப்புடன் நடைபெற்ற கட்சித் தலைவர் கூட்டத்தில் ஆராயப்பட்டது.

தேர்தல் தொகுதி எல்லை நிர்ணயம் மேற்கொள்ளத் தாமதம் தேவை என ஆணையாளர் அறிவித்துள்ளார். இத்தனை காலமும் இருந்து விட்டு அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஐ. தே.க. அவசரப்படுகிறது. அவசர சட்டமூலமாக அரசியலமைப்புத் திருத்தத்தை மேற்கொள்ளும் முயற்சியை எதிர்க்கின்றோம். 3 மாத கால அவகாசம் உள்ளதால் அந்தக் காலப் பகுதியில் அரசியலமைப்புத் திருத்தம் குறித்து ஆராய்ந்து உடன்பாடு எட்ட முடியும். மக்களின் அபிலாஷைகளை பொருட் படுத்தாது அவசர சட்டமாக இதனை முன்வைக்க முயன்றால் கடுமையான முடிவு எடுக்க நேரிடும்.

தேசிய அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமானால் தேர்தலை ஒத்துவைக்க வேண்டும் என நாம் ஒரு போதும் நிபந்தனை முன்வைக்கவில்லை. ஐ.தே.க.வுடனன்றி ஜனாதிபதியுடனே நாம் தேசிய அரசாங்கம் குறித்து பேசி வருகிறோம். ஜனாதிபதிக்கு ஒத்துழைப்பு வழங்கவும் எமது கட்சி ஆதரவாளர்களின் நலனுக்காகவுமே தேசிய அரசாங்க கோரிக்கைக்கு மத்திய குழு கொள்கை ரீதியில் ஆதரவு வழங்க முடிவு செய்தது. நாம் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்துடனன்றி மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கத்துடனே இணைந்து செயற்பட விரும்புகிறோம் என்றார்.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த சு.க. தேசிய அமைப்பாளர் சுசில் பிரேம் ஜயந்த எம்.பி., ஜனாதிபதியின் அதிகாரத்தை குறைத்தல் தேர்தல் முறை மாற்றம் என்பவற்றை 20 வது திருத்தமாக சமர்ப்பிக்க முடியும். தேர்தல் முறை மாற்றத்தின் பின்னரே அடுத்த தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது சிவில் அமைப்புகள் மற்றும் கட்சிகளின் கோரிக்கையாகும். ஐ.ம.சு.மு. வாகவே அடுத்த தேர்தலில் குதிக்க இருக்கிறோம் என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply