எதிர்க்கட்சி தலைவர் சர்ச்சை சுசிலுடன் பேசி முடிவெடுக்குமாறு ஐ.ம.சு.முவுக்கு சபாநாயகர் அறிவிப்பு

எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பாக எழுந்துள்ள நெருக்கடி குறித்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான சுசில் பிரேம ஜயந்தவுடன் கலந்துரையாடி முடிவெடுத்துத் தமக்கு அறிவிக்குமாறு சபாநாயகர் சமல் ராஜபக்ஷ நேற்று அறிவித்தார். பாராளுமன்றம் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் நேற்று பிற்பகல் ஒரு மணிக்குக் கூடியது. சபை அமர்வின் ஆரம்ப நிகழ்வுகளைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பாக சபையில் கடும் சர்ச்சை ஏற்பட்டது. இச்சமயம் பாராளுன்ற உறுப்பினர்கள் குமார வெல்கம, பந்துல குணவர்தன, சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல, பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா, தினேஷ் குணவர்தன, வாசுதேவ நாணயக்கார, பிரதியமைச்சர் லலித் திஸாநாயக்கா ஆகியோர் உரையாற்றினர்.

இங்கு வாசுதேவ நாணயக்கார எம்.பி. உரையாற்றும் போது “ரணில் விக்கிரமசிங்க பிரதமராக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினரான நாம் ஆதரவு நல்கவில்லை. அவருக்கு ஆதரவு நல்கியவர்கள். ஐ.ம.சு. முன்னணியில் இருக்கவும் முடியும். அதனால் ஆதரவு நல்காதவர்கள் எழுந்து நிற்குமாறு கூறினார்.

அதற்கு எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா உட்பட ஐ.ம.சு.மு. எம்.பிக்கள் சகலரும் எழுந்து நின்றனர். இருப்பினும் இச்சமயம் சபையில் எதிரணித் தரப்பில் இருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜனநாயக தேசியக் கூட்டணி எம்.பிக்கள் எவரும் எழுந்து நிற்கவில்லை. இவ்விவகாரம் தொடர்பான வாதங்களைச் செவியேற்ற சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, “எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு பாராளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வாவை நியமிக்குமாறு எழுத்து மூலம் அறிவித்தார். அதற்கேற்ப அவர் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டார்.

தற்போது அப்பதவி தொடர்பாக நெருக்கடி ஏற்பட்டிருந்தால் அது தொடர்பாக ஐ.ம.சு.மு. பொதுச் செயலாளர் சுசில் பிரேம ஜயந்தவுடன் ஒன்றுபட்டு கலந்துரையாடி பிரச்சினைக்கு தீர்வு கண்டு முடிவைத் தமக்குத் தெரிவியுங்கள். அப்போது நான் எதிர்க்கட்சித் தலைவரை அறிவிக்கின்றேன் என்றார்.

இச்சமயம் ஒழுங்கு பிரச்சினை எழுப்பிய பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன, எதிர்க் கட்சித் தலைவர் பதவி குறித்து எழுந்துள்ள நெருக்கடிக்கு ஐ.ம.சு. முன்னணியுடன் கலந்துரையாடி சுமுகமான தீர்வுக்கு வர முயற்சி செய்கிறோம். அதற்கு நியாயமான தீர்வு கிடைக்கத் தவறும் பட்சத்தில் நாம் இச்சபையில் சுயாதீன பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவாக செயற்பட இடமளிக்கப்பட வேண்டும் என்றார்.

சபாநாயகர்: ஒன்றுபட்டு செயற்படுகள். சுமுகமாக பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ளுங்கள் என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply