புத்தாண்டை முன்னிட்டு விசேட பஸ், ரயில் போக்குவரத்து சேவை

புத்தாண்டையொட்டி விசேட ரயில் மற்றும் பஸ்சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக உள்ளக போக்குவரத்து அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரதெரிவித்தார். 50 மேலதிக ரயில் சேவைகளும் 3482 மேலதிக இ.போ.ச. பஸ் சேவைகளும் நடத்தப்பட உள்ளதோடு தனியார் பஸ்களும் மேலதிகமாக சேவையில் ஈடுபடுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். பண்டிகைக் காலத்தில் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் அறவிடும் பஸ் நடத்துனர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

போக்குவரத்து அமைச்சில் நேற்று நடைபெற்ற விசேட ஊடக மாநாட்டில் கருத்து தெரிவித்த அவர்,

கொழும்பு மற்றும் பிரதான நகரங்களிலிருந்து சொந்த இடங்களுக்கு செல்லவும் பண்டிகையின் பின்னர் கொழும்பு திரும்பவும் விசேட போக்குவரத்து சேவைகள் நடத்தப்படும்.

விசேட இ.போ.ச பஸ் சேவைகள் 15 ஆம் திகதி வரை நடத்த இருப்பதோடு 15 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை கொழும்பு திரும்ப விசேட பஸ் சேவைகள் இடம்பெறும். இதற்கென விசேட நடவடிக்கை பிரிவொன்று மத்திய பஸ்தரிப்பிடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு கருத்துத் தெரிவித்த இ.போ.ச தலைவர் ரமல் சிரிவர்தன,

ஏப்ரல் 8 முதல் விசேட பஸ் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டன. அதிவேக நெடுஞ்சாலையிலும் விசேட பஸ் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வழமையாக இடம்பெறும் 5800 சாதாரண பஸ் சேவைகளுக்கு மேலதிகமாக கூடுதல் பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தியிருக்கிறோம்.

சாரதிகள் மற்றும் நடத்துனர்களின் தட்டுப்பாடு காணப்படுவதால் அவர்களுக்கான விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது என்றார்.

ரயில்வே பொது முகாமையாளர் விஜய அமரதுங்க கூறியதாவது,

கொழும்பிலிருந்து பதுளை, மஹவ, மாத்தறை, காலி ஆகிய இடங்களுக்கு மேலதிக ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. விசேட டிக்கட் விநியோக பகுதிகளும் ஆரம்பித்துள்ளோம். ரயில்வே ஊழியர்களின் விடுமுறையும் ரத்துச் செய்யப்பட்டுள்ளது. விசேட ரயில் சேவை 19 ஆம் திகதி வரை நடைபெறும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply