தீவிரவாதத்தை ஒழிக்க உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் : மோடி
தீவிரவாதம் அனைத்து நாடுகளுக்கும் சமமான வலியை ஏற்படுத்தக் கூடியது என்பதால் அதனை முறியடிக்க உலக நாடுகள் ஒன்றிணைந்து வலுவான வியூகம் வகுக்க வேண்டும் என்று பிரான்சில் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். ஐ.நா.பாதுகாப்பு சபையில் இந்தியா நிரந்தர இடம் பெற தங்கள் நாடு ஆதரவு அளிக்கும் என பிரான்ஸ் உறுதி அளித்துள்ளது.
பிரான்ஸ் நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் பிரதமர் மோடி பாரிசில் அந்நாட்டு அதிபர் பிரான்கோயிஸ் ஹோலண்டேவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இரு நாடுகளுக்கும் இடையே பாதுகாப்பு, அணுசக்தி, விண்வெளி ஆய்வு, சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்தவது குறித்து அப்போது அவர்கள் விவாதித்தனர். இருநாட்டு தலைவர்கள் முன்னிலையில் 17 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்தியாவில் புதுச்சேரி, நாக்பூர், உள்ளிட்ட மூன்று நகரங்களை ஸ்மார்ட் சிட்டியாக மாற்ற பிரான்ஸ் உதவுவது உள்ளிட்டவற்றில் உடன்பாடு ஏற்பட்டது. பின்னர் இரு நாட்டுத் தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய மோடி, தமது மேக் இன் இந்தியா திட்டத்திற்கு பிரான்ஸ் ஆதரவு அளிக்க முன்வந்துள்ளதாகக் குறிப்பிட்டார். பிரான்சிடமிருந்து 36 ரபேல் ரக போர் விமானங்களை வாங்க இந்தியா முன் வந்துள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
இந்திய ரயில்வே துறையை நவீனப்படுத்த பிரான்ஸ் ஒத்துழைப்பு அளிக்க முன்வந்துள்ளதாகக் குறிப்பிட்ட மோடி, இருநாட்டு ஒத்துழைப்பு பரஸ்பரம் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று குறிப்பிட்டார். இந்தியாவில் 13 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய தங்கள் நாடு முடிவு செய்திருப்பதாகக் கூறிய பிரான்ஸ் அதிபர் பிரான்கோயிஸ் ஹோலண்டே, நீர் மூழ்கி கப்பல்கள், ஏவுகணைகள் உள்ளிட்டவற்றை இணைந்து தயாரிக்க இருநாடுகளும் உடன்பட்டிருப்பதாகக் கூறினார்.
இந்த சந்திப்பின்போது விண்வெளி ஆராய்ச்சித்துறையில் இந்தியா பிரான்சின் நட்பு 50 ஆண்டுகளை எட்டியதை குறிக்கும் விதமாக அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. பின்னர் செய்னே நதியில் பிரதமர் மோடியும், பிரான்கோயிஸ் ஹோலண்டேவும் ஒன்றாக இணைந்து படகுசவாரி செய்தனர். இரு நாட்டு வெளியுறவுத்துறை அதிகாரிகள் புடைசூழ நடைபெற்ற இந்த பயணத்தின்போது செய்னே நதிக்கரையில் அமைந்துள்ள இயற்கை வளங்களையும், எழில் மிகு கட்டிடங்களையும் ரசித்தபடியே மோடியும், பிரான்கோயிஸ் ஹோலண்டேவும் இருநாட்டு நட்புறவு பற்றி பேச்சுவார்த்தை நடத்தினர்.
பிரதமர் மோடி பிரான்சில் இன்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். பாரிசிலிருந்து டவ்லஸ் நகருக்குச் செல்லும் மோடி அங்கு முதல் உலகப்போரின்போது பலியான இந்திய ராணுவ வீரர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்துகிறார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply