மேற்கு வங்காள உள்ளாட்சித் தேர்தலில் வன்முறை: வாக்குச்சாவடிக்குள் ஒருவர் சுட்டுக்கொலை

மேற்கு வங்காளத்தில் உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவின்போது ஏற்பட்ட வன்முறையில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். ஒருவர் படுகாயம் அடைந்தார். மேற்கு வங்காளத்தில் 91 நகராட்சிகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் நடைபெற்று வருகிறது. மாநில காவல்துறை மற்றும் 35 கம்பெனி மத்திய படையினரின் தீவிர பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்று வந்தபோதும், ஒரு சில இடங்களில் வன்முறை ஏற்பட்டது.

பர்த்வான் மாவட்டத்தில் கத்வா பஸ் நிலையம் அருகில் உள்ள வாக்குச்சாவடியில் இந்திரஜித் (வயது 30) என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அவர், வாக்குச்சாவடிக்குள் முண்டியடித்துக் கொண்டு வந்த ஒரு கும்பலை தடுத்தபோது சுட்டுக் கொல்லப்பட்டதாக அக்கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இதுபற்றி அறிக்கை அளிக்கும்படி வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

இதுதவிர கத்வாவில் உள்ள பல வார்டுகளில் வெடிகுண்டுகள் வீசப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டம் திடாகர் ஆந்திர வித்யாலயாவில் உள்ள ஒரு வார்டில் 55 வயதான பஞ்சு சோங்கர் ஓட்டு போடுவதற்காக வரிசையில் நின்றபோது அவர் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. துப்பாக்கி சூடு நடத்திய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

வடக்கு டம்டம் நகராட்சியின் 2-வது வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாகவும் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பிரச்சினை ஏற்படும் பகுதிகளுக்கு கூடுதல் போலீசார் விரைந்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply