நேபாள நிலநடுக்கம்; பலியானோர் எண்ணிக்கை 1,805 ஆக உயர்வு, இந்தியாவில் 51 பேர் உயிரிழப்பு

நேபாளத்தில் நில நடுக்கத்தின் பிடியில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 1,805 ஆக உயர்ந்தது. இந்தியாவில் நிலநடுக்கத்தில் 51 பேர் உயிரிழிந்தனர். நேபாளம் மற்றும் இந்தியாவில் பாதிக்கப்பட்ட இடங்களில் இந்தியா முழு வீச்சில் மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளது. அழகான நேபாளம் நாட்டை நிலநடுக்கம் என்ற பெயரில் இயற்கை சீற்றம், சின்னாபின்னப்படுத்திஉள்ளது. நேபாளத்தில் நேற்று 7.9 ரிக்டர் அளவுகொண்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் தலைநகர் காட்மாண்டு தொடங்கி போக்ரா, லாம்ஜங், கீர்த்தி நகர் என அந்த நாடு முழுவதும் ருத்ர தாண்டவம் ஆடி விட்டது. எங்கு பார்த்தாலும் வீடுகளும், அலுவலகங்களும், வணிக நிறுவனங்களும், கோவில்களும் சீட்டு கட்டு போல சரிந்து விழுந்தன. நில நடுக்கத்தால் மக்கள் நெருக்கம் மிகுந்த காட்மாண்டு பள்ளத்தாக்கு பகுதி உருக்குலைந்து விட்டது. 

இடிபாடுகளில் சிக்கி ஏராளமானோர் கை, கால்கள் என உறுப்புகள் சேதம் அடைந்த நிலையில், காட்மாண்டு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. காயம் அடைந்தவர்களுக்கு டாக்டர்கள், வீதிகளிலேயே திறந்தவெளி மருத்துவ முகாம்களை அமைத்து சிகிச்சை அளிக்கின்றனர்.

நிலநடுக்கத்தின் பிடியில் சிக்கி 1500 பேர் பலியாகினர் என்று தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் மேலும் பலரது சடலம் இடிபாடுகளுக்குள் இருந்து மீட்கப்பட்டு உள்ளது. இதனையடுத்து பலியானவர்கள் எண்ணிக்கை 1,805 ஆக உயர்ந்து உள்ளது. 4,700-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. நேபாளம் மற்றும் இந்தியாவில் பாதிக்கப்பட்ட இடங்களில் இந்தியா முழு வீச்சில் மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளது. இந்திய விமானபடை விமானங்கள், ஹெலிகாப்டர்கள் நேபாளத்தில் இறக்கப்பட்டு உள்ளது.

நில நடுக்கத்தால் கடினமான நிலையை சந்தித்துள்ள நேபாளத்துக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று இந்தியா உறுதிஅளித்தது. நேற்று முதல் இந்தியா மீட்பு பணியில் தீவிரமாக இறங்கி உள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பணியிலும் இந்தியா முழுவீச்சில் இறங்கி உள்ளது. இதற்கிடையே காட்மண்டுவில் சிக்கியவர்களை இந்தியாவிற்கு அழைத்துவரும் பணியிலும் இந்தியா தீவிரம் காட்டி வருகிறது. இந்தியர்கள் விமானப்படை விமானம் மூலம் இந்தியா அழைத்து வரப்படுகின்றனர்.

நேற்றைய நேபாள நிலநடுக்கத்தின் தாக்கம், இந்தியாவிலும் உணரப்பட்டது. பீகார் உள்ளிட்ட 10–க்கும் மேற்பட்ட வட மாநிலங்களில் நில நடுக்கம் உணரப்பட்டது. கட்டிடங்கள் குலுங்கின. இடிந்து விழுந்தன. இடிபாடுகளில் அகப்பட்டு, 51 பேர் உயிரிழந்தனர். 237 பேர் காயம் அடைந்து உள்ளனர். இந்தியாவில் அதிகப்பட்சமாக பீகாரில் 38 பேர் உயிரிழந்தனர். 133 பேர் காயம் அடைந்து உள்ளனர் என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு தெரிவித்து உள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply