புலிகளை அழித்ததாக புகழாராம் சூட்டும் மஹிந்த அரசே அவர்களை பாதுகாத்தது
தமிழ் இனவாதத்தைப்போல் பல மடங்கு பலமடைந்த இனவாத அரசாங்கமே மஹிந்த அரசாங்கம். தமிழ் தலைவர்களின் செயற்பாடுகளை விடவும் சிங்கள இனவாத செயற்பாடுகளே கடந்த ஆட்சியில் பலமடைந்து காணப்பட்டது. வரதராஜப்பெருமாளை போல் பல சிங்கள இனவாதத் தலைவர்கள் இருக்கின்றதை மறந்துவிடக்கூடாது என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
விடுதலைப் புலிகளை அழித்ததாக புகழாரம் சூட்டும் மஹிந்த அரசாங்கமே புலிகளை பாதுகாத்தது என்பதையும் மறந்துவிடக் கூடாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஜாதிக ஹெல உறுமய கட்சியினால் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது.
தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என கூறிக்கொண்டு வடக்கில் இனவாதம் பேசிய தமிழ் தலைவர்கள் இருந்தமையும் இப்போதும் இருக்கின்றமையையும் நாம் அறிவோம். தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளவும் சர்வதேசத்தை தம் பக்கம் ஈர்க்கவும் இவர்கள் செய்யும் வேலைத்திட்டமே இவை. வரதராஜப்பெருமாள் போன்றவர்கள் இலங்கைக்கு வருவதனால் நாட்டில் பாதிப்புகள் ஏற்படும் என்ற கருத்தினை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். இவர் போன்றோரை தமிழ் மக்கள் எப்போதோ நிராகரித்து விட்டனர். இப்போது இனவாதத்திற்கு அப்பால் மூவின மக்களின் ஒற்றுமையால் புதிய அரசாங்கம் அமையப்பெற்றுள்ளது. எனினும் கடந்த பத்து ஆண்டுகளில் தமிழ் இனவாதத்திற்கும் அப்பால் சிங்கள இனவாதமே தலைதூக்கியிருந்தது. அதேபோல் தீவிரவாதத்திற்கு நாடு அடிபணியவும் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கமே முக்கிய காரணம்.
விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்தினை முறியடித்ததாக கூறும் மஹிந்த கூட்டணியே ஆரம்பத்தில் விடுதலைப் புலிகளின் உதவியாளர்களாக இருந்தனர். 2004 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கு யார் நிதி உதவி செய்து தேர்தலை புறக்கணிக்க சொன்னார்கள் என்ற கேள்விக்கு மஹிந்த ராஜபக்ஷ பதில் கூறமுடியுமா. அதுமட்டுமின்றி யுத்த கால கட்டத்தில் வடக்கில் மேற்கொள்ளப்பட்ட நிதிச் செயற்பாடுகளில் மோசடிகள் இடம்பெற்றதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. அதேபோல் மின்சக்தி அமைச்சில் இடம்பெற்ற ஊழல் செயற்பாடுகளில் முன்னைய அரசாங்கம் அக்கறையின்றி செயற்பட்டமை தொடர்பிலும் நாம் முறைப்பாடுகளை முன்வைத்துள்ளோம்.
இவை தொடர்பில் முதலில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை விடுத்து இப்போதும் வரதராஜப்பெருமாளை கைது செய்யக் கோரி போராடுவதனால் யாருக்கும் எந்தப் பயனும் இல்லை. எமது அரசாங்கம் அமைந்திருப்பது ஊழல் இல்லாத நாட்டினை உருவாக்குவதுடன் ஜனநாயகம் பலமடையும் நாட்டினை அமைப்பதற்குமே. இதில் மோசடிக்காரர்களை தண்டிப்பதே எமது பிரதான நோக்கம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply