ஜனநாயகத்துக்கு ஏற்படவிருந்த பாரிய அனர்த்தம் எமது திருத்தங்களால் தவிர்க்கப்பட்டது

19ஆவது திருத்தச்சட்டமூலத்தால் நாட்டுக்கு ஏற்படவிருந்த பாரிய அனர்த்தம் தடுக்கப்பட்டிருப்பதாக வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். பாராளுமன்றத்தின் அதிகாரம் மற்றும் மக்களின் இறைமையை கடத்திச்செல்லும் வகையிலேயே 19ஆவது திருத்தச்சட்ட மூலம் தயாரிக்கப்பட்டிருந்தது. அரசியலமைப்பு ரீதியாக நாட்டில் ஏற்படவிருந்த பாரிய அனர்த்தத்தைத் தங்களது திருத்தங்களால் தடுக்க முடிந்திருப்பதாக அவர் கூறினார்.

பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத்தெரிவிக்கும்போதே இவ்வாறு கூறினார். இந்த அனர்த்தத்தை தடுப்பதற்கு இணைந்த எதிர்க்கட்சியின் உறுப்பினர் களும், அரசாங்கத்துடன் இணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்களும் தம்முடன் இணைந்துகொண்டதாக அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசியக் கட்சியால் கொண்டுவரப் பட்ட 19ஆவது அரசியல்திருத்தச்சட்டமூலம் முழுமையாக மறுபக்கம் திருப்பப்பட்டே நிறைவேற்றப்பட்டுள்ளது. எமது திருத்தங்களை ஏற்றுக்கொள்ளாவிட்டால் வாக்களிக்கமாட்டோம் எனக் கூறினோம். அவ்வாறு செய்வது அரசாங்கத்துக்குத் தோல்வி என்பதால் எமது திருத்தங்களை ஏற்றுக்கொள்ள ஆளுங்கட்சி இணங்கிக் கொண்டது என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, இந்த அரசியலமைப்புத் திருத்தச்சட்டத்தை மக்கள் பக்கம் திருப்பியது அரசாங்கம் அல்ல. எதிர்க் கட்சியான தாங்களே என ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் எம். பி கூறினார். ஐக்கிய தேசியக் கட்சி தனது குறுகிய அரசியல் நோக்கத்துக்காகவே அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டுவரவேண்டிய தேவை இருந்தது. ஜே.ஆரின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரசியலமைப்பு மாற்றப்பட்டுவிட்டதாக ஊடகங்களில் கூறப்பட்டாலும், ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகாரங்களை பிரதமரான ரணில் விக்ரமசிங்கவின் கைகளுக்கு எடுக்க வேண்டும் என்பதே அவர்களின் நோக்கமாக இருந்தது. எனினும் அவர்களின் அந்த முயற்சிக்கு நாம் இடமளிக்கவில்லை.

அவர்கள் சமர்ப்பித்த அரசியலமைப்புத் திருத்தத்தில் போலியான சில விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன. பொதுத் தேர்தலின் பின்னர் உருவாகும் அரசாங்கம் தேசிய அரசாங்கமாயின் அமைச்சரவையின் எண்ணிக்கை 100ஆக வரையறுக்கப்பட்டது. இது குறுகிய காலத்துக்காக உள்ளடக் கப்பட்ட விடயம். அரசியலமைப்புத் திருத்தம் என்பது நீண்டகால நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட வேண்டிய ஒன்றே தவிர குறுகிய காலத்தைக் கொண்டதாக அமையக் கூடாது.

ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப் பட்டால், அவ்வாறு குறைக்கப்படும் அதிகாரம் பாராளுமன்றத்துக்கே வழங்கப்பட வேண்டும். அரசியலமைப்பு சபைக்கு வெளியே இருந்து 7 பேர் நியமிக்கப்பட வேண்டும் என அவர்களின் யோசனையில் குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும், அதனை முழுமையாக மாற்றி 7 பாராளுமன்ற உறுப்பினர்களும், மூன்று சுயாதீன நபர்களையும் நியமிப்பதற்கு திருத்தப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்கள் பாரியளவில் எதுவும் குறைக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply