21-ஆம் நூற்றாண்டின் மோசமான நிலநடுக்கம் காஷ்மீர் மாநிலத்தில் நிகழலாம்: வல்லுனர்கள் அதிர்ச்சி தகவல்

பூமியின் சொர்க்கம், ஆசியாவின் சுவிட்சர்லாந்து என்று அழைக்கப்படும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் இந்த நூற்றாண்டின் கடுமையான நிலநடுக்கம் ஏற்படும் என்று வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ரிக்டர் அளவுகோலில் 9 ஆக பதிவாக வாய்ப்புள்ள இந்நிலநடுக்கத்தால் ஜீலம் நதி தண்ணீர் வெடிகுண்டாக மாறக்கூடும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் பிரபல நிலநடுக்க ஆய்வாளரான ரோஜர் பில்ஹாம் இது குறித்து கூறுகையில், காஷ்மீரில் நிகழ உள்ள கடும் நிலநடுக்கத்தால், நிலச்சரிவு ஏற்பட்டு, ஜீலம் நதி துண்டிக்கப்படலாம் என்றும், அதன் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஒட்டுமொத்த காஷ்மீர் பள்ளத்தாக்கும் பேராபத்தில் சிக்க நேரிடலாம் எனவும் பில்ஹாம் கூறியுள்ளார்.

கிட்டத்தட்ட பேரழிவுக்கு சாத்தியமான ஆயுதமாகவே ஜீலம் நதி மாறிவிடும் என தெரிவித்துள்ள பில்ஹாம், 9.0 ரிக்டர் அளவுள்ள நிலநடுக்கம் ஏற்படும் நிலையில் 300000 லட்சம் மக்கள் பல்வேறு காரணங்களுக்காக இறக்க நேரிடலாம் என்றார். இந்திய எல்லைப்பகுதியில் உள்ள பாகிஸ்தான் அணுமின் நிலையத்தில் கதிர்வீச்சு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் பில்ஹாம் தெரிவித்துள்ளார்.

கடந்த 8 வருடங்களாக கணக்கிடப்பட்ட ஜி.பி.எஸ்.(குளோபல் பொசிசனிங் சிஸ்டம்) மதிப்பீடுகளின் படி, இமயமலையின் வடக்கு முனை நிலப்பகுதி வேகமாக நகர்ந்து வருவது திட்டவட்டமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே கடுமையான நிலநடுக்கம் ஏற்படுவது உறுதி என பில்ஹாம் கூறியுள்ளார். காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 2005 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கானோர் பலியானது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply