திரை மறைவில் பேசியது ஏன்? பேசப்பட்ட விடயங்கள் என்ன? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் விளக்கம்

அரசாங்கத் தரப்பு மற்றும் புலம் பெயர் தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகளுடன் பிரித்தானியாவில் எந்தவொரு இரகசியப் பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை. போரின் பின்னரான வடக்கு கிழக்கில் வாழ்ந்து வருகின்ற தமிழ் மக்களின் நலன்கள். எதிர்காலத் திட்டங்கள். காணிகள் விடுவிப்பு மற்றும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்தே அங்கு கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக புலம்பெயர்ந்து வாழும் தமிழ் அமைப்புக்களின் உதவியைப் பெற்றுக்கொள்வதே இதன் முக்கிய நோக்கமாகும்.

உண்மையில் தென்னிலங்கைச் சூழல் காரணமாகவே இப்பேச்சுக்கள் திரைமறைவாக நடத்தப்பட்டதே தவிரவும் அதில் மறைப்பதற்கு எதுவுமே இல்லை. தென்னிலங்கையில் சிலருக்குத் தெரிந்தால் அரசாங்கம் புலிகளுடன் பேசுவதாகவும், ஈழம் வழங்கப்படப் போகிறது என்பதாகவும் பிரசாரம் செய்வார்கள். அதேபோன்று வடக்கில் தெரிந்தால் தம்மை விட்டுவிட்டு தமிழ்க் கூட்டமைப்பு தனித்துச் செயற்படுவதாக அறிக்கை மேல் அறிக்கை விடுவார்கள். இவற்றைக் கருத்திற் கொண்டே இரகசியமாக அல்ல திரை மறைவில் முத்தரப்பும் இணைந்து பேசினோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் தமிழ் மக்களுக்கான தீர்வினை எப்படியாவது பெற்றுவிட வேண்டும் எனும் உயர்ந்த நோக்கத்திலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதன் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் முழு மூச்சாகச் செயற்பட்டு வருகிறது. தமிழருக்கு நியாயமான தீர்வு கிடைக்கக் கூடாது என்பதில் தென்னிலங்கையில்தான் சில இனவாதத் தலைவர்கள் கங்கணம் கட்டிச் செயற்படுகிறார்கள் எனப் பார்த்தால் வடக்கிலும் சிலர் குழப்பத்தை ஏற்படுத்தி இவ்வாறு அறிக்கை விட்டு கேள்வி கேட்டும் செயற்பட முனைவது வருத்தமளிக்கிறது எனவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்குத் தெரியாமல் அல்லது அவரது அனுமதி பெறாது தான் எந்தவொரு பேச்சுவார்த்தைகளிலோ அல்லது இதுபோன்ற சந்திப்புக்களிலோ கலந்து கொள்வதில்லை எனத் தெரிவித்த சுமந்திரன் எம்.பி. சில தவிர்க்க முடியாத காரணங்களினால் எமது எல்லாச் செயற்பாடுகளையும் கூட்டமைப்பிலுள்ள ஏனைய கட்சிகளுக்கும். ஊடகங்களுக்கும் முழுமையாக அறிவிக்க முடியாது போன சம்பவங்களும் உள்ளதாகவும் கூறினார்.

அத்துடன் இந்தப் பிரித்தானியா பேச்சுவார்த்தை முடிவடைந்த பின்னர் நாங்கள் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தோம். எது சம்பந்தமான கூட்டம் என விளக்கமாகக் கூறியிருந்தோம். உண்மையில் இவ்விடயம் பகிரங்கப்படுத்தப்படாமலேயே இருந்திருக்க வேண்டும்.

மேற்படி தமிழ் மக்கள் பிரச்சினைகள் தெற்கில் அரசியல் மயப்படுத்தி, புலிகளுக்கு மீண்டும் இடங்கொடுக்க தற்போதைய அரசாங்கம் முனைகின்றது, என்ற பொய்யான குற்றச்சாட்டை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரது சகாக்களும் முன்வைத்து வருகின்றனர். இதன் காரணமாகவே இந்தக் கூட்டத்தை திரை மறைவில் நடத்தியிருந்தோம். ஆனால் அந்தச் செய்தி வெளியில் கசிந்துள்ளது என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply