ராணுவ ரகசியங்கள் திருட்டு: சீன நாட்டினர் மீது நடவடிக்கை எடுக்க ஒபாமா பரிசீலனை

அமெரிக்காவில் ஓ.பி.எம். என்னும் ‘ஆபிஸ் ஆப் பெர்சனல் மேனேஜ்மென்ட் நெட்வொர்க்’கில் சட்டவிரோதமாக நுழைந்து, முக்கிய ராணுவ ரகசியங்களை சீன நாட்டினர் திருடியதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக அமெரிக்க ராணுவ அதிகாரிகள், வீரர்கள், அவர்களது குடும்பத்தினர் பற்றிய தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இப்படி ‘ஆபிஸ் ஆப் பெர்சனல் மேனேஜ்மென்ட் நெட்வொர்க்’கில் புகுந்து தகவல்கள் திருடப்பட்டிப்பது, இது இரண்டாவது முறை என கூறப்படுகிறது. ஏற்கனவே அமெரிக்க அரசு துறை ஊழியர்கள், முன்னாள் ஊழியர்கள் என 40 லட்சம் பேரின் தகவல்கள் திருடப்பட்டுள்ளன.

இப்போது, அமெரிக்க புலனாய்வு துறையினர், ராணுவத்தினர், ஒப்பந்தக்காரர்கள் பாதுகாப்பு அனுமதிக்காக சமர்ப்பித்திருந்த ரகசிய தகவல்களை குறிவைத்து, திருட்டு நடந்துள்ளதாக சொல்லப்படுகிறது. 2 திருட்டுக்களையும் செய்திருப்பது ஒரே தரப்பினர்தான் எனவும் நம்பகமான தகவல்கள் கூறுகின்றன.

ராணுவ வீரர்களின் கண் நிறம் உள்ளிட்ட தனிப்பட்ட அங்க அடையாளங்கள், நிதி நிலைமை, அவர்களின் உறவினர்கள், நண்பர்கள் தொடர்பு உள்ளிட்ட அனைத்து தகவல்களும் களவாடப்பட்டுள்ளன.

127 பக்கங்களை கொண்ட படிவம் எண்.86-ல் பெறப்பட்ட அனைத்து தகவல்களையும், ‘ஆபிஸ் ஆப் பெர்சனல் மேனேஜ்மென்ட் நெட்வொர்க்’கில் சட்ட விரோதமாக புகுந்தவர்கள் திருடி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது தொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு ஊழியர்களின் முக்கிய தகவல்கள் களவாடப்பட்டுள்ளதாக புலனாய்வு அமைப்பினர் நம்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க எதிர் புலனாய்வு துறை முன்னாள் அதிகாரி ஜோயல் பிரென்னர் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், “இணைய தளத்தில் புகுந்து திருடி பெறப்பட்டுள்ள தகவல்கள், அவர்களுக்கு தங்க சுரங்கம் போன்றதாகும்” என கூறினார்.

அமெரிக்க அரசின் இணையதளத்தில் சட்டவிரோதமாக புகுந்து தகவல்கள் திருடப்படுவது இது புதிதல்ல. கடந்த ஆண்டு, நவம்பர் மாதம் உள்நாட்டு பாதுகாப்பு துறை கம்ப்யூட்டரில் புகுந்து 25 ஆயிரம் ஊழியர்களின் தகவல்கள் திருடப்பட்டன. பல்லாயிரக்கணக்கான அரசு ஊழியர்களின் தகவல்களும் களவாடப்பட்டன.

இதேபோன்று கடந்த மார்ச் மாதம், ‘ஆபிஸ் ஆப் பெர்சனல் மேனேஜ்மென்ட் நெட்வொர்க்’கில் புகுந்து தகவல்கள் திருடும் முயற்சி முறியடிக்கப்பட்டது. இதில் சீனாவின் கை வரிசை இருந்ததாக அமெரிக்கா குற்றம் சாட்டியது. ஆனால் அதை சீனா, “பொறுப்பற்ற குற்றச்சாட்டு” என கூறி மறுத்து விட்டது.

இப்போது இணைய தளத்தில் புகுந்து தகவல்கள் திருடப்பட்டிருப்பதையடுத்து, இணையதள பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் நிர்வாகம் நேற்று தீவிரமாக பரிசீலித்தது.

‘ஆபிஸ் ஆப் பெர்சனல் மேனேஜ்மென்ட் நெட்வொர்க்’கில் புகுந்து திருடியவர்கள் மீது பொருளாதார தடை விதிக்கவும் ஜனாதிபதி ஒபாமா பரிசீலித்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply