ரெயில்வே துறையை தனியார் மயமாக்குவது தொழிலாளர்களின் எதிர்காலத்தை பாதிக்கும்: கருணாநிதி அறிக்கை

ரெயில்வே துறையை தனியார் மயமாக்குவது பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இதுகுறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கேள்வி:- மத்திய அரசு நியமித்த விவேக் தேவ்ராய் தலைமையிலான நிபுணர் குழு, இந்திய ரெயில்வேயில் தனியார் துறை மற்றும் தன்னிச்சையான ஒழுங்கு முறை ஆணையம் ஆகியவற்றை அனுமதிக்க வேண்டும் என்று பரிந்துரைகளைச் செய்திருக்கிறதே?.

பதில்:- “நவரத்னா” என்ற சிறப்பு பெயருடன் அழைக்கப்படும் தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட லாபம் வரக்கூடிய பல பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்பதில் இலக்கு நிர்ணயித்து மிகுந்த அக்கறை காட்டி வரும் மத்திய பா.ஜ.க. அரசு, இந்தியாவின் மிகப்பெரிய போக்குவரத்து நிறுவனமான ரெயில்வே துறையிலும் தனியார் மயத்தை ஊக்குவிப்பதற்கான முயற்சியிலே அக்கறை காட்டத்தக்க வகையில், நரேந்திர மோடி அமைத்த நிபுணர் குழு தனது பரிந்துரைகளை மத்திய அரசுக்கு தந்துள்ளது. பல லட்சம் தொழிலாளர்கள் பணிபுரியும் ரெயில்வே துறையைச் சீரழிக்கும் வகையிலான பல்வேறு பரிந்துரைகளை “சீர்திருத்தம்” என்ற பெயரில் இந்த நிபுணர் குழு மத்திய அரசுக்கு செய்துள்ளது.

இந்த பரிந்துரைகளை மத்திய அரசின் அமைச்சகம் ஆய்வு செய்துவிட்டு, பின்னர் பிரதமர் அலுவலகத்திற்கு கோப்பினை அனுப்பிவைக்க உள்ளது. இந்த குழு செய்துள்ள பரிந்துரைகளை எல்லாம் அடுத்த ஐந்தாண்டுகளில் நடைமுறைப்படுத்தினால், அதன் பின்னர் ரெயில்வேக்கு என்று தனியாக பட்ஜெட் ஒன்றே தேவைப்படாது என்று ஜனநாயக ரீதியிலான கருத்து பரிமாற்றங்களையும், விவாதங்களையும் புறந்தள்ளக்கூடிய வகையில், இந்த குழு பரிந்துரை செய்திருக்கிறது.

ஒட்டுமொத்தமாக இந்த குழு அளித்துள்ள பரிந்துரைகள் ரெயில்வே துறையை சமூக அக்கறையற்ற, லாப நோக்கம் மட்டுமே கொண்ட நிறுவனமாக மாற்றிடும் வகையிலான பரிந்துரைகளாக உள்ளன. எனவே மத்திய பா.ஜ.க. அரசு, கோடிக்கணக்கான ஏழை, எளிய நடுத்தர மக்களின் நலன்களையும், லட்சக்கணக்கான தொழிலாளர்களின் எதிர்காலத்தையும் பாதிப்புக்குள்ளாக்கும் இந்த பரிந்துரைகளை ஏற்க மாட்டோம் என்று அறிவிப்பதே நன்மை பயக்கும் செயலாக அமைந்திடும்.

கேள்வி:- தமிழக அரசுடன் அதானி குழுமம், சூரிய மின்சக்தி நிலையம் ஒன்று 1,400 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்க ஒப்பந்தம் ஒன்று செய்து கொண்டிருக்கிறதாமே?.

பதில்:- பிரதமர் நரேந்திர மோடியின் நெருங்கிய நண்பரான அதானிக்கு சொந்தமான குழுமம், தமிழகத்தில் 1,400 கோடி ரூபாய் மதிப்பில் 200 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது. இதையும் ஆயிரம் மெகாவாட்டாக உயர்த்துவதற்கான பேச்சுவார்த்தைகளும் அ.தி.மு.க. அரசுடன் நடைபெற்று வருகிறதாம். வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கு மேல் முறையீட்டில் ஜெயலலிதா பெற்றிருக்கும் விடுதலைக்கும், அதானியின் இந்த சூரிய மின்சக்தி நிலைய ஒப்பந்தத்திற்கும் ஏதோ சம்மந்தம் இருப்பதாக யாரோ சிலர் கூறினால், அதில் உண்மை என்ன என்பது நமக்கு தெரியாது.

கேள்வி:- மத்திய அரசு கொண்டாடவிருக்கும் ஜூன் 21 சர்வதேச யோகா தினம் பற்றி?.

பதில்:- “யோகா”வை பெரிதும் விரும்புபவன் தான் நான். இன்னும் சொல்லப்போனால் ஒரு காலத்தில் நானும் அன்றாடம் யோகா செய்து கொண்டிருந்தவன் தான். யோகக் கலையில் வல்லுனரான தேசிகாச்சாரிடம் அந்தக் கலையைக் கற்றுக்கொண்டேன். அந்தக் கலையை அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதும் என் விருப்பம்தான். நான் எழுதிய ஒரு கட்டுரையிலே கூட, “நடைப்பயிற்சி மூலம் முக்கியமாக உடலின் எடையைக் குறைப்பது – மூச்சுப் பயிற்சி மூலம் சுவாசப் பைகளை முறையாக இயங்கச் செய்வது – குருதியோட்டத்தைச் சீராக்கிக் கொள்வது – அதன் அடிப்படையில் இருதயத்துக்கு பாதுகாப்பு உருவாக்குவது – யோகப் பயிற்சி மூலம் எலும்புகள், நரம்புகளுக்கு வலுவூட்டுவது – தியானப் பயிற்சி மூலம் மன அமைதி காண்பது; இவை போன்றவை வாழ்வுக்கு இன்றியமையாதவை” என்றே தெரிவித்திருக்கிறேன்.

ஆனால் அரசின் சார்பில் சர்வதேச யோகா தினம் கொண்டாடுவது பற்றி சீத்தாராம் யெச்சூரியிடம் கருத்து கேட்டபோது, அவர் கூறியது அலட்சியப்படுத்த கூடியதல்ல.

அதாவது “நாட்டிலே உள்ள குழந்தைகளில் 1 கோடியே 95 லட்சம் குழந்தைகள் முறையாக உணவு கிடைக்காமல், பசி, பட்டினியோடு படுக்கச் செல்கிறார்கள்; 24 சதவீதத்தினர் போதிய சத்துணவு இன்றி வாடிக்கொண்டிருக்கிறார்கள். குழந்தைகளின் உடல் ஆரோக்கியம் மோசமான நிலையிலே இருக்கும்போது அவர்களால் எப்படி யோகாசனம் செய்ய முடியும்?. சர்வதேச யோகா தினம் என்பது இந்துத்துவாவின் நிகழ்ச்சி நிரலில் ஓர் அங்கமேயொழிய வேறல்ல” என்று கூறியிருக்கிறார். இந்த நேரத்தில் யெச்சூரியின் கருத்தும் சிந்தித்து பார்க்கத்தக்கதே.

கேள்வி:- ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள கால தாமதத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் முன்னாள் ராணுவத்தினர் மிகப்பெரிய “தர்ணா” செய்தது பற்றி?.

பதில்:- ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் என்ற திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்து ஓராண்டு முடிந்த பிறகும், அந்த திட்டம் நடைமுறைப்படுத்தவில்லை என்பதற்காக இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது. ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் என்ற திட்டத்தை அமல்படுத்தினால், 22 லட்சம் முன்னாள் ராணுவத்தினரும், போரில் கணவனை இழந்த 6 லட்சம் பெண்களும் பயனடைவார்களாம். எனவே மத்திய அரசு இந்த பிரச்சினையில் இனியும் காலம் கடத்தாமல், உடனடியாக இதுகுறித்து முடிவெடுத்து அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் இந்த கோரிக்கை இடம் பெற்றிருக்கிறது என்பதையும் நினைவுபடுத்துகிறேன்.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply