மியான்மரில் தவிக்கும் தமிழர்கள்: மலேசியாவில் கொத்தடிமைகளாக விற்கப்படும் அவலம்

மியான்மரில் ரோஹிங்கிய முஸ்லிம்கள் பல்வேறு கொடுமைகளை அனுபவித்து வரும் நிலையில், அங்கிருக்கும் தமிழர்களும் ஆள்கடத்தல் கும்பல்களால் பெரும் துயரத்திற்கு ஆளாகி வருகின்றனர். ஆனால், இது குறித்து செய்திகள் எதுவும் வெளி உலகிற்கு வருவதில்லை என்று சர்வதேச பத்திரிக்கைகள் குரல் எழுப்பியுள்ளது. மியான்மரின் தமோ மற்றும் தத்தோன் மாவட்டங்களில் வாழும் இந்து மற்றும் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த தமிழர்கள் அரிசி விளைவித்து, விவசாயத்தை தொழிலாக செய்கின்றனர். இவர்களுள் பலர் ஏஜென்டுகளிடம் சிக்கி மலேசியாவிற்கு கொத்தடிமைகளாக கடத்துப்படுகின்றனர்.

ஆள்கடத்தலில் ஈடுபடும் கும்பல், இவர்களுக்கு மலேசியாவில் வேலை வாங்கித் தருவதாக பொய்யான வாக்குறுதிகளை அளித்து கொத்தடிமைகளாக மாற்றும் வேலைகளில் தொடர்ந்து ஈடுபடுவதாக ‘தி ஸ்டார் பேப்பர்’ என்ற கனடாவைச் சேர்ந்த பத்திரிகை அதிர்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளது.

ஆள்கடத்தல் கும்பலால் அனுப்பப்படும் இவர்கள் அனைவருமே, ரோஹிங்கிய மற்றும் வங்கதேச அகதிகள் பயணிக்கும் தகுதியற்ற படகுகளில் கடல்மார்க்கமாக மலேசியா மற்றும் தாய்லாந்து வழியாக உணவு, தண்ணீர் போன்ற அத்யாவசியப் பொருட்கள் எதுவுமின்றி ஆபத்தான பயணத்தை மேற்கொள்ள வற்புறுத்தப்படுகின்றனர். இவர்களில் பலர் தங்களது சொத்துக்களை விற்று, ஏஜென்டுகளிடம் பணத்தைக் கொடுத்து பின்னர் கொத்தடிமைகளாக வாழும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். மலேசிய நகரங்களான பெனாங், கேதா, பெர்லிஸ் போன்ற பகுதிகளில் தமிழர்கள், தங்களுக்கு தெரியாத வேலைகளைச் செய்யும் கொத்தடிமைகளாக இருக்கின்றனர் என்று அந்த பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

பல்லாயிரக்கணக்கான ரோஹிங்கிய முஸ்லிம்கள் சந்தித்து வரும் அதே பிரச்சினைகளை தற்போது மியான்மரில் வசிக்கும் சிறுபான்மை தமிழர்களும் சந்தித்து வருகின்றனர் என்று ஸ்டார் நாளிதழ் தெரிவித்துள்ளது. அரசு இந்த விவகாரத்தில் உடனே தலையிட்டு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் உட்பட பலரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply