அமெரிக்காவில் விமான விபத்தில் டைட்டானிக் பட இசை அமைப்பாளர் மரணம்: ஹாலிவுட் பட உலகம் இரங்கல்
டைட்டானிக் பட இசை அமைப்பாளர் ஜேம்ஸ் ஹார்னர், அமெரிக்காவில் நடந்த விமான விபத்தில் மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு ஹாலிவுட் பல உலகம் இரங்கல் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் லாஸ் பட்ரேஸ் தேசிய வனப்பகுதியில் திங்கட்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 9.30 மணிக்கு ‘எஸ்௩12 டுக்கானோ எம்கே 1’ என்ற குட்டி விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. ஒற்றை என்ஜின் கொண்ட இந்த விமானம், ‘டைட்டானிக்’ படத்தின் இசை அமைப்பாளரான ஜேம்ஸ் ஹார்னருக்கு சொந்தமான விமானங்களில் ஒன்று, ஆனால் விபத்தில் இறந்தவர் யார் என தெரியவில்லை என்று முதல் கட்ட தகவல்கள் வெளியாகின.
பின்னர் இந்த விபத்தில் உயிரிழந்தவர், ஜேம்ஸ் ஹார்னர்தான் (வயது 61) என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவரது உதவியாளர் சில்வியா பேட்ரிக்ஜா, ‘பேஸ்புக்’ சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், “ஒரு மிகப்பெரிய துயரத்தால் எங்கள் குடும்பம் பாதிக்கப்பட்டுள்ளது. நான் தனிமையில் இருக்கப்போகிறேன். என் வேதனை தீர வேண்டும். ஒரு மாபெரும் இதயத்தையும், நம்ப முடியாத திறமையையும் கொண்ட அற்புதமான மனிதரை இழந்து விட்டோம். அவர் தனக்கு விருப்பமானதை செய்து கொண்டிருந்தபோது மரணம் அடைந்திருக்கிறார். உங்கள் அனைவரின் ஆதரவுக்கும் நன்றி” என குறிப்பிட்டுள்ளார்.
விபத்துக்குள்ளானது ஜேம்ஸ் ஹார்னரின் விமானம் தான் என்பதை அவரது வக்கீல் ஜே கூப்பரும் உறுதி செய்தார்.
மரணம் அடைந்த ஜேம்ஸ் ஹார்னர், ஒரு பயிற்சி பெற்ற விமானி ஆவார். அவர் இசை அமைப்பில் வெளியான ‘டைட்டானிக்’, ‘ஏலியன்ஸ்’, ‘அவதார்’, ‘பிரேவ் ஹார்ட்’, ‘எ பியுட்டிபுல் மைன்ட்’ போன்ற படங்கள் காலத்தால் அழியாத உயிரோவியங்கள் ஆகும்.
‘டைட்டானிக்’ படத்தின் இசைக்காக ஒரு விருதும், செலின் தியோன் பாடிய ‘மை ஹார்ட் வில் கோ ஆன்’ என்ற பாடலுக்காக சிறந்த அசல் பாடலுக்கான விருதை பாடலாசிரியர் வில் ஜென்னிங்சுடன் இன்னொரு விருதும் பெற்றார்.
ஜேம்ஸ் ஹார்னர், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 1953-ம் ஆண்டு, ஹாரி ஹார்னர், ஜோன் ஹார்னர் தம்பதியரின் மகனாக பிறந்தார். 1970-களின் பிற்பகுதியில் ஹாலிவுட் பட உலகில் இசை அமைப்பாளராக பிரபலம் அடைய தொடங்கினார். 100-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்துள்ளார். ஜேம்ஸ் ஹார்னரின் மரணம், உலகமெங்கும் உள்ள அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
அவரது மறைவுக்கு ஹாலிவுட் பட உலகம் இரங்கல் தெரிவித்துள்ளது.
டைரக்டர் ரான் ஹோவர்ட் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், “திறமையான இசை அமைப்பாளரும், எனது நண்பரும், 7 படங்களில் இணைந்து பணியாற்றியவருமான ஜேம்ஸ் ஹார்னர் விமான விபத்தில் பலியாகி விட்டார். அவரது அன்புக்குரியவர்களுக்கு அனுதாபங்கள்” என கூறி உள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply