நைஜீரியாவில் இரட்டை குண்டு வெடிப்புக்கு 50 பேர் பலி

வடகிழக்கு நைஜீரியாவில் அடுத்தடுத்து நிகழ்ந்த குண்டு வெடிப்பு தாக்குதல்களில் ஐம்பதுக்கும் அதிகமானோர் பலியாகினர். கானோ மாவட்டத்தின் தலைநகரான கானோ நகரின் மையப்பகுதியில் உள்ள கடைத்தெருவில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு துணிமணிகள் மற்றும் வீட்டுக்கு தேவையான இதரப் பொருட்களை வாங்க ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர். அப்போது, அங்குள்ள பிரபல செருப்புக்கடை வாசலில் சக்திவாய்ந்த குண்டு வெடித்ததால் பலர் உடல் சிதறி உயிரிழந்தனர். காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மேலும் பலரை காப்பாற்றுவதற்காக சிலர் விரைந்தோடி வந்தனர்.

சம்பவ இடத்துக்கு மிக அருகாமையில் அடுத்தும் ஒரு குண்டு பயங்கரமாக வெடித்தது. இதனால், அந்த இடமே போர்க்களம்போல் காட்சியளித்தது. சாலை நெடுகிலும் மனித உடல்கள் கிழிந்து, சின்னாபின்னமாகி சிதறி கிடந்தன.

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசாரும், ஆம்புலன்ஸ் ஊழியர்களும் காயமடைந்தவர்களை மருத்துவமனைகளுக்கு ஏற்றிச் சென்றனர். இச்சம்பவத்தில் ஐம்பதுக்கும் அதிகமானோர் உயிரிழந்ததாகவும், நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயங்களுடன் கானோ நகரில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சிகிச்சை பெற்று வருபவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் சமவிகிதத்தில் வாழும் நைஜீரியாவில் இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை அமைக்க வேண்டும் என கடந்த 2009-ம் ஆண்டில் இருந்து தீவிரவாதத்தை ஆயுதமாக கையில் ஏந்தி போகோஹரம் என்ற அமைப்பு போராட்டத்தில் குதித்துள்ளது. இந்த போகோஹரம் தீவிரவாதிகளின் கொலைவெறி தாக்குதல்களுக்கு சுமார் 15 ஆயிரம் அப்பாவி பொதுமக்கள் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply