மஹிந்த புலிகளுக்கு பணம் கொடுத்தது உறுதிப்படுத்தப்பட்டால் பிரஜாவுரிமையை இல்லாமல் செய்யலாம்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, புலிகளுக்கு பணம் கொடுத்தமை உறுதிப்படுத்தப்பட்டால் அவருடைய பிரஜாவுரிமையை இல்லாமல் செய்ய முடியும் என ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். சுனாமியால் வீடுகளை இழந்த வடபகுதி மக்களுக்கு வீடுகளைக் கட்டிக்கொடுப்பது என்ற போர்வையில் புலிகளுக்கு மஹிந்த ராஜபக்ஷ பணம் வழங்கியிருப்பதாக அவர் குற்றஞ்சாட்டினார். கிரிபத்கொடையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஜே.வி.பியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறினார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை பகிஷ்கரிப்பதற்காக மஹிந்த ராஜபக்ஷ புலிகளுக்குப் பணம் வழங்கினார். முதலில் முழுமையான பணம் வழங்கப்படவில்லை. வெற்றிபெற்ற பின்னர் மிகுதிப் பணம் வழங்குவதாக கூறப்பட்டது. இதற்கமைய வெற்றிபெற்ற பின்னர் வடக்கில் சுனாமியால் வீடுகளை இழந்தவர்களுக்காக வீடு அமைத்துக் கொடுக்கும் திட்டத்தின் ஒப்பந்தம் புலிகளுக்கு வழங்கப்பட்டது.
இது தொடர்பில் நான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வினவியிருந்தேன். இதுகுறித்து விசாரணை நடத்தினால் இறுதியில் மஹிந்த ராஜபக்ஷவை சிறைக்கு அனுப்பவேண்டி ஏற்படும். எனவே ஜனாதிபதி விசாரணைக் குழுவொன்றை அமைத்து விசாரணை நடத்தப்படும். இதில் குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டால் அவருடைய பிரஜாவுரிமையை இரத்துச் செய்ய முடியும் என்று கூறியிருந்தார்.
இந்த விசாரணையை தடுத்து நிறுத்துவதற்காகவே மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் அரசியலில் குதித்து அதிகாரத்தைப் பெறுவதற்கு கடும் பிரயத்தனங்களை மேற்கொள்கின்றார். இது மட்டுமன்றி மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்தினருக்கு எதிராக மோசடிக் குற்றச்சாட்டுக்கள் உள்ளன. இவை தொடர்பான சகல விசாரணைகளையும் தடுத்து நிறுத்துவதே அவருடைய நோக்கமாக உள்ளது.
எனவே மோசடிக்கு எதிராக நிற்கும், மனசாட்சிக்கு அமைய செயற்படும் எவருக்கும் இம்முறை பொதுத் தேர்தலில் வெற்றிலைக்கு வாக்களிக்க முடியாது. இது மாத்திரமன்றி மஹிந்த ராஜபக்ஷவிடமிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மீட்கவேண்டியுள்ளது என்றும் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply