விடைபெற்றார் கலாம்: பிரதமர் மோடி-தலைவர்களின் இறுதி அஞ்சலிக்கு பிறகு உடல் நல்லடக்கம்

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மேகாலயாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவர்களிடையே உரையாற்றியபோது மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவரது உடல் டெல்லியில் இருந்து அவரது சொந்த ஊரான ராமேசுவரத்திற்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. இன்று காலை கலாமின் உடல் பள்ளிவாசலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு சிறப்பு தொழுகை நடைபெற்றது.

பின்னர் அவரது உடல் அடக்கம் செய்யப்பட உள்ள பேய்க்கரும்பு கிராமத்திற்கு கலாம் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்ப்டடது. அங்கு அடக்கம் செய்வதற்காக தயார் செய்யப்பட்டிருந்த இடத்தில் தலைவர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

இன்று காலை கலாம் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு வந்து சேர்ந்தார். மதுரையில் இருந்து ஹெலிகாப்டரில் மண்டபத்திற்கு சென்றார், பின்னர் அங்கிருந்து கார் மூலம் ராமேசுவரம் வந்து கலாமின் உடலுக்கு மலர் வளையம் வைத்து நீண்ட நேரம் அஞ்சலி செலுத்தினார். பிறகு கலாமின் அண்ணனுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் தலைவர்கள் அமர்வதற்காக அமைக்கப்பட்டிருந்த மேடையில் சென்று அமர்ந்து இறுதிச்சடங்கில் கலந்துக்கொண்டார்.

மோடியை தொடர்ந்து தமிழக கவர்னர் ரோசையா, காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி, சுந்தர்ராஜ், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட தமிழக அமைச்சர்கள், கேரள கவர்னர் சதாசிவம், காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், மத்திய மந்திரி வெங்கையா நாயுடு, ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் உம்மன்சாண்டி, கர்நாடக முதல்வர் சித்தராமையா, வைகோ, பொன்.ராதாகிஷ்ணன், விஜய்காந்த், அன்புமணி ராமதாஸ், மத்திய மந்திரி மனோகர் பாரிக்கர் உட்பட பல முக்கிய தலைவர்கள் கலாம் உடலுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இவர்களுடன் லட்சக்கணக்கான பொது மக்களும், இளைஞர்களும் அஞ்சலி செலுத்தினார்கள்.

இதனை அடுத்து கலாமின் தனிச்செயலாளர் பொன்ராஜ் உட்பட அவருடன் பணியாற்றியவர்கள், நண்பர்கள் ஆகியோர் கலாம் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.

பின்னர் முப்படையை சேர்ந்த வீரர்கள் கலாம் உடல் மீது போர்த்தப்பட்டிருந்த தேசியக் கொடியை முறைப்படி நீக்கினார்கள். பிறகு அவரது உடல் அப்துல் கலாமின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் இஸ்லாமிய முறைப்படி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்கள். அப்போது, பிரதமர் மோடி உட்பட அனைத்து தலைவர்களும் எழுந்து நின்றனர். பின்னர் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

விடைபெற்றது கலாமின் உடல் மட்டும் தான்… மக்களின் இதயங்களில் வாழ்ந்துக்கொண்டுதான் இருப்பார்….

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply