‘பிரித்தாளும் அரசியலுக்கு இனி இடமில்லை’: ரணில்
இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, புதிய அரசாங்கத்தில் பங்கெடுக்குமாறு அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். ஆகஸ்ட் 17-ம் திகதி நடந்த பொதுத் தேர்தலில் அதிக இடங்களை வென்றுள்ள ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான கூட்டணி புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான பேச்சுவாத்தைகளில் ஈடுபட்டுவருகின்றது.
அரசு தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ள தலைவர் ரணில் விக்ரமசிங்க, அமையவுள்ள புதிய அரசாங்கத்தில் இணைந்துகொள்ளுமாறு நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்துக் கட்சியினருக்கும் அழைப்பு விடுப்பதாக கூறியுள்ளார். ‘எனக்கு கிடைத்திருக்கின்ற மக்கள் ஆணையின்படி, எங்களின் தேசிய வேலைத்திட்டம் தொடர்பில் பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்காக நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்தைக் கோரவுள்ளோம். அதன் மூலமே எங்களின் அரசியலை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வோம்’ என்று கொழும்பில் செய்தியாளர்கள் முன்னிலையில் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஓரிரு ஆண்டுகளாவது அனைத்து அரசியல் சக்திகளும் சேர்ந்து பணியாற்றுவதன்மூலம் முக்கிய பிரச்சனைகளை தீர்க்கும் விடயத்தில் கருத்தொற்றுமையை ஏற்படுத்த முடியும் என்றும் ரணில் கூறினார்
மீண்டும் மக்களை பிரித்தாளும் அரசியலை யாரும் முன்னெடுப்பதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் கூறினார்.
‘இந்தப் பணியிலிருந்து யாரும் ஒதுங்கிவிடுவார்கள் என்றோ அல்லது பிரித்தாளும் அரசியலை நோக்கி மீண்டும் யாரும் செல்வார்கள் என்றோ நான் நினைக்கவில்லை. நாம் அதனை அனுமதிக்க மாட்டோம்’ என்றார் விக்ரமசிங்க.
கடந்த ஜனவரியில் புதிய ஜனாதி மைத்திரிபால சிறிசேனவால் பிரதமராக நியமிக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்க, தற்போது கிடைத்துள்ள தேர்தல் வெற்றியின் மூலம் மீண்டும் பிரதமராக பதவியேற்கவுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply