ஈழத்தமிழர்களை ரனில் காப்பாற்றுவார் என்பது பகல் கனவாகவே அமையும்: ராமதாஸ் அறிக்கை
புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ரனில், ஈழத்தமிழர்களுக்கு அதிகாரம் வழங்குவது குறித்து எந்த உத்தரவாதத்தையும் அளிக்காமல், மழுப்பலான பதில்களையே அளித்திருக்கிறார். ஒன்றுபட்ட இலங்கையில், தமிழர்களுக்கு சுயாட்சி அதிகாரம் வழங்கப்படுமா? என்ற கேள்விக்கு விடையளித்த அவர், 13–வது அரசியல் சட்டத்திருத்தத்திற்குட்பட்டு இதை செய்ய முடியுமா? என்பது குறித்து ஆராயலாம் என கூறியிருக்கிறார்.
13-ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தின்படி தமிழர்கள் வாழும் பகுதிகளின் முதல்–அமைச்சர்களுக்கு தமிழகத்தில் ஊராட்சித் தலைவருக்கு உள்ள அதிகாரத்தைக் கூட வழங்க முடியாது எனும் நிலையில், சுயாட்சி உரிமை வழங்குவது குறித்து ஆராயலாம் என்பது ஏமாற்று வேலை என்பதைத் தவிர வேறில்லை.
13–ஆவது அரசியல் சட்டத்திருத்தத்தில் தமிழர்களுக்கு ஓரளவாவது அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்பதற்காக சேர்க்கப்பட்ட அம்சங்களில் மிகவும் முக்கியமானவை வடக்கு–கிழக்கு மாநிலங்களை இணைப்பது, காவல்துறை மற்றும் நில நிர்வாக அதிகாரங்களை மாநில அரசுகளுக்கு வழங்குவதாகும். ஆனால், மாநிலங்கள் இணைப்பு குறித்து எந்த வாக்குறுதியையும் ரனில் வழங்கவில்லை.
நில அதிகாரம் தேவை இல்லை; காவல்துறை அதிகாரம் தவறாக பயன்படுத்தப்படும் என்று கூறி அவற்றை வழங்க முடியாது என்பதை மறைமுகமாகத் தெரிவித்து விட்டார். இத்தனைக்கும் இவை புதிய கோரிக்கைகள் அல்ல. 2002–ம் ஆண்டில் விடுதலைப்புலிகள் போர் நிறுத்தத்தை அறிவித்த பிறகு அவர்களுக்கும், ரனில் அரசுக்கும் இடையே நடந்த பேச்சுகளின் போது இந்த அதிகாரங்களை வழங்க அரசுத்தரப்பு முன் வந்தது.
ஆனால், இப்போது இந்த அதிகாரங்களை வழங்க மறுப்பதன் மூலம் தமிழர்களை மூன்றாம் தர குடிமக்களாக நடத்தவே ரனில் துடிக்கிறார் என்பது தெளிவாகிறது. 10 ஆண்டுகளாக அரசியலில் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த விக்ரமசிங்கேவுக்கு, அதிபர் தேர்தலில் ராஜபக்சேவை வீழ்த்தி மறுவாழ்வு அளித்தது தமிழர்கள் தான். அவர்களுக்கு விக்ரமசிங்கே துரோகம் செய்யக்கூடாது.
அதேபோல், இலங்கை இறுதிப்போரில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது குறித்த பன்னாட்டு விசாரணையை ஏற்க முடியாது; உள்நாட்டு விசாரணைக்கு மட்டுமே தமது அரசு ஒப்புக்கொள்ளும் என்றும் அவர் கூறியுள்ளார். இது ஈழத்தமிழர் இனப்படு கொலையை மூடி மறைக்கும் முயற்சியாகும்.
இலங்கை இனப்படுகொலையை முன்னின்று நடத்தியது ராஜபக்சேவும், அவரது குடும்பத்தினரும் தான். அவர்கள் அரசியல் ரீதியாக எதிரிகள் என்ற போதிலும், சிங்களர்கள் என்ற ஒரே காரணத்திற்காக ராஜபக்சே தண்டிக்கப்பட்டுவிடக்கூடாது என்று நினைக்கும் விக்ரம சிங்கே தமிழர்களின் நலனைக் காப்பாற்றுவார் என்று நினைப்பது பகல் கனவாகவே அமையும்.
இன்னும் கேட்டால் விடுதலைப்புலிகளுடன் பேச்சு வார்த்தை நாடகத்தை நடத்திக் கொண்டே, ஈழத்தமிழர்களை ஒழிப்பதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்து முடித்தவர் தான் ரனில் விக்ரமசிங்கே.
ராஜபக்சேவாக இருந்தாலும், விக்ரமசிங்கேவாக இருந்தாலும் ஈழத்தமிழர்கள் விஷயத்தில் ஒரே நிலைப்பாடு தான். ராஜபக்சே, விக்ரம சிங்கே என்று முகமூடிகள் தான் மாறுமே தவிர சிங்களப் பேரினவாதம் தான் அவர்களை ஆட்டிப்படைக்கும்.
எனவே, இப்பிரச்சினையில் இந்தியா தலையிட்டு இலங்கை மீதான போர்க்குற்றச் சாற்றுகளை பன்னாட்டு குற்றவியல் விசாரணைக்கு அனுப்பவும், ஈழத் தமிழர்களுக்கு அவர்கள் விரும்பும் தீர்வைப் பெற்றுத் தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply