மஹிந்த மீண்டும் வென்றிருந்தால் மனிதப் படுகொலை நிகழ்ந்திருக்கும்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தேர்தலில் வெற்றியீட்டி மீண்டும் அதிகாரத்துக்கு வந்திருந்தால் பாரிய மனித படுகொலைகள் இடம்பெற்றிருக்கும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஷ இலங்கையில் காவல்துறை அரசாங்கமொன்றையே நடத்தி வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள சந்திரிகா குமாரதுங்க இந்திய ஊடகவியளலாளர் சிலரைச் சந்தித்தபோதே இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார். அப்பாவிகள் பலரை மஹிந்த படுகொலை செய்திருப்பார் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமக்கும் தமக்கு நெருக்கமானவர்களுக்கும் எதிராக ஊழல் மோசடிகள் தொடர்பிலான குற்றச்சாட்டுக்களை மூடி மறைக்கவே மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி பீடம் ஏற முயற்சித்தார். மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவை விடவும் வேறும் நாடுகளுக்கு முக்கியத்துவம் அளித்து வந்தார்.
எனினும் இலங்கைக்கு இந்தியா மிகவும் முக்கியமானது எனவும் முதலீடு முதல் பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையில் உறவுகள் நீடித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சீன அபிவிருத்தித் திட்டங்களினால் நாட்டின் கடன் சுமை அதிகரித்தது. மஹிந்த தரப்பினர் தரகுப் பணத்தை அதிகளவில் பெற்றுக்கொண்டதே இதற்கான காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷவை இந்தியா தோற்கடித்தது என்ற கூற்றில் உண்மையில்லை. இலங்கை வாழ் மக்கள் தங்களது ஜனநாயக உரிமைகளை உறுதி செய்யக்கூடியவர்கள் எனவும் சந்திரிக்கா தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஷ பல்வேறு வழிகளில் தமக்கு நெருக்கடிகளை கொடுத்து வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் காணிகளை மீள வழங்கவும், காணாமல் போனவர்கள் தொடர்பிலான பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கவும், அதிகாரப் பகிர்வினை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரங்களில் இந்தியா காத்திரமான பங்களிப்பினை வழங்கும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply