இழப்புகளைச் சந்தித்த மக்களின் கதைகள் செவிமடுக்கப்பட வேண்டும்

unoயுத்தத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கள், இழப்புக்கள் மற்றும் அதிர்ச்சிகளை ஒப்புக்கொள்வதுடன், மனித உரிமைகள் மீறப்பட்ட மக்கள் மற்றும் இழப்புக்களைச் சந்தித்த மக்களின் கதைகள் செவிமடுக்கப்படுவது அவசியமானது. ‘பயங்கரவாதத்தை ஒழித்தோம்’ ‘நாட்டின் இறைமையைப் பாதுகாப்போம்’ என்ற வாசகங்களைக் கூறிக்கொண்டு பாதிக்கப் பட்டவர்களின் கருத்துக்களை ஒதுக்கிவிட முடியாது என பல்கலைக்கழக கல்விசார் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

 

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் பாரியளவில் இடம்பெற்றிருப்பதை ஐ.நா. ஆணையரின் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. எனவே மனித உரிமைகள் மீறப்பட்ட சகல தரப்பினர் தொடர்பிலும் விசாரணை நடத்தப்படுவது அவசியம் என பல்கலைக்கழக கல்விசார் ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

நாட்டிலுள்ள சகல தேசிய பல்கலைக் கழகங்களையும் சார்ந்த 41 கல்விசார் ஊழியர்கள் கையெழுத்திட்டு வெளியிட்டு ள்ள கடிதத்திலேயே இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கடிதத்தின் பிரதிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அல் ஹ¥சைன் ஆகியோருக்கு அனுப் பிவைக்கப் பட்டுள்ளன.

 

அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட் டுள்ளதாவது, சகல இனங்கள் மற்றும் சகல மதங்களுக்கிடையில்

 

நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதே புதிய அரசாங்கத்தின் முன்நிலையில் காணப்படும் பாரிய சவாலாகும். 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் ஆட்சியிலி ருந்த அரசாங்கம் சிங்கள பெரும் பான்மையை பெரிதுபடுத்தி சிறு பான்மையினரை ஒடுக்கியமையே இதற்குப் பிரதான காரணமானது.

 

இவ்வாறான சூழ்நிலையிலேயே புதிய அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியிருக்கும் பிரேரணை மற்றும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையா ளர் அலுவலகத்தின் விசாரணை அறிக்கைக்கு முகங்கொடுக்கவேண்டி ஏற்பட்டுள்ளது.

 

இந்தக் கடிதத்தில் கையெழுத்திட் டிருக்கும் நாம் புலிகளுக்கும் பாதுகாப் புப் படையினருக்கும் இடையில் நடைபெற்ற யுத்தம் தொடர்பில் வேறுபட்ட நிலைப்பாடுகளைக் கொண் டிருந்தோம். சிலர் யுத்தத்தை எதிர்த் தனர், சிலர் ஆதரித்தனர்.

 

எமக்கிடை யில் மாறுபட்ட நிலைப்பாடுகள் இருந்தாலும் 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னர் இலங்கை அரசாங்கம் நடந்துகொண்ட முறையே இனங்களுக்கிடையில் பதற்றத்தை ஏற்படுத்தியது. எந்தவொரு யுத்தமும் சுத்தமானதாக நடைபெற்றவையல்ல.

 

எல்லா யுத்தங்களும் பாதிக்கப்பட்ட வர்களையும், தோல்வியடைந்தவர்க ளையும் உருவாக்கியே உள்ளது. இறுதிக்கட்டத்தில் நடைபெற்ற யுத்தத்தில் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அறிக்கையில் பலமான சாட்சியங்கள் உள்ளன. வடக்கு, கிழக்கைச் சேர்ந்த எமது சக பிரஜைகள் இழப்புக்களுக்கும், வன்முறைகளுக்கும், அதிர்ச்சிகளுக்கும் உள்ளாகியிருந்ததை நாம் நேரடியாகவும் கண்டுள்ளோம்.

 

இழப்புக்களை மூடி மறைப்பதற்கு கடந்த அரசாங்கம் எடுத்த முயற்சிகள் நல்லிணக்கத்துக்குப் பாரிய தடையாக அமைந்தது. யுத்தத்தில் ஏற் பட்ட இழப்புக்கள் மற்றும் பாதிப்புக் களை வெளிக்கொணர எடுக்கப்பட்ட முயற்சிகள் ‘தேசியத்துக்கு எதிரான’ ‘பயங்கரவாதத்துக்கு ஆதரவான’ ‘தேசத்துரோகமான’ செயற்பாடுகள் என அடையாளப்படுத்தப்பட்டன. இவ் வாறான செயற்பாடுகளுக்கு முற்றுப் புள்ளிவைக்கும் காலம் கனிந்துள்ளது.

 

யுத்தவெற்றிக்கு இலங்கை அரசாங்கம் உரிமைகொண்டாடுகிறது. மனித உரிமை மீறல்கள், நாட்டை கட்டியெழுப்புவதில் ஏற்பட்ட வரலாற்று தவறுகள் என்பனவால் எமது நாட்டைச் சேர்ந்த பிரஜைகளுக்கும் நெருக்குதல் ஏற்பட்டதையும் நாம் இவ்விடத்தில் மறந்துவிடக்கூடாது.

 

இவ்வாறான நிலையில் யுத்தத்தால் ஏற்பட்ட இழப்புக்கள், பாதிப்புக்கள் மற்றும் அதிர்ச்சிகள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என நாம் உறுதியாக நம்பு கின்றோம். மனித உரிமைகள் மீறப்பட்ட மக்கள் மற்றும் இழப்புக்களைச் சந்தித்த மக்களின் கதைகள் செவிமடுக்கப்படுவது அவசியமானது. ஐ.நா அறிக்கை தென்பகுதியில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களையும் உள்ளடக்கியுள்ளது.

 

எனினும், இந்த அறிக்கையானது ‘இலங்கைக்கு எதிரானது’ என்ற பரப்புரையை மேற்கொள்வதற்கு சில குழுக்களும், தனிநபர்களும் சில ஊடகங்களும் முயற்சிக்கின்றன. யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல் தொடர்பான விசாரணை முயற்சிகளைக் குறைத்துமதிப்பிடும் செயற்பாடுகளுக்கு நாம் கடுமையான எதிர்ப்பைத் தெரிவிக்கின்றோம். இவ்வாறான முயற்சிகள் வெளிநாட்டு சதிகள், இறைமை மீதான தாக்குதல், இராணுவத்தினரைக் காட்டிக்கொடுப்பது என்ற கருத்துக்களால் தடுக்கப்படுவது நல்லிணக்கத்தை குழப்பும் செயற்பா டாகப் பார்க்கின்றோம்.

 

சகல பிரஜை களின் மனித உரிமைகளைப் பாது காப்பதற்கான சர்வதேச கடப்பாடை இலங்கை கொண்டுள்ளது என்பதை எதிர்க்கும் தரப்பினருக்குக் கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.

 

எனவே எதிர்காலத்தில் எத்தகைய பொறிமுறை கொண்டுவரப்பட்டாலும் அதனூடாக யுத்தத்தின் போது பாதி க்கப்பட்ட மக்கள் குறித்து கவனம் செலுத்துவது அவசியம் என இலங்கை அரசாங்கம், சகல அரசியல் கட்சிகள், ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச சமூகம் மற்றும் ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு இணைஅனுசரணை வழங்கும் நாடு களுக்குக் கூறிக்கொள்ள விரும்புகின் றோம்.

 

மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களை அதிர்ச்சியிலிருந்து மீட்பது மாத்திரமன்றி அவர்களுக்கு உளரீதியான உதவி வழங்கப்படுவதையும் உறுதிசெய்ய வேண்டும். எனவே வெறுமனே சட்டச்செயற்பாடுகள் மூலமான விசாரணைகளை நடத்தி, சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்குவதுடன் மாத்திரம் நின்றுவிடாது யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான சமூகப் பாதுகாப்பு, பொருள் உதவிகள் போன்ற சகல விதமான உதவிகளையும் உறுதிசெய்வது அவசியம் என்பதையும் நாம் குறிப்பிட விரும்புகின்றோம்.

 

இவ்வாறன நிலையில் பொறுப்புக்கூறல் செயற்பாடானது வெறுமனே தனிநபர்கள், குழுக்கள் மற்றும் அமைப்புக்களின் பெயர்களை காப்பாற்றுவதற்கான ஒன்றாகப் பயன்படுத்தப்படாது என்பதை உறுதிசெய்யுமாறு இலங்கை மற்றும் ஐ.நாவிடம் கோரிக்கை விடுப்பதாக அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply