கச்சத்தீவு அருகே ராமேசுவரம் மீனவர்களை தாக்கி விரட்டியடிப்பு: இலங்கை கடற்படை நடவடிக்கை
ராமேசுவரத்தை சேர்ந்த சுமார் 3 ஆயிரம் மீனவர்கள் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நேற்று காற்றின் வேகம் கடல் அலையின் சீற்றம் ஆகியவை அதிகமாக இருந்தது.இருப்பினும் மீனவர்கள் அதனை சமாளித்து நடுக் கடலில் மீன் பிடித்து கொண்டுருந்தனர். சில படகுகள் கச்சத்தீவு அருகே மீன் பிடிக்கும் பணியில் ஈடுபட்டன.அப்போது அங்கு இலங்கை கடற்படையினர் சில குட்டி ரோந்து கப்பல்களில் வந்தனர். அவர்கள் இங்கு மீன் பிடிக்கக்கூடாது உடனே கிளம்புங்கள் என எச்சரித்துள்ளனர்.
இதனை கேட்ட மீனவர்கள் அவசர, அவசரமாக அங்கிருந்து புறப்பட்ட தயாரானார்கள். இந்த நேரத்தில் இலங்கை கடற்படையினரில் சிலர் மீனவர்களின் படகுகளுக்கு வந்து அவர்களை தாக்கி விரட்டி உள்ளனர்.
மேலும் மீனவர்களின் படகுகளில் இருந்த மீன்பிடி சாதனங்களையும் சேதப்படுத்தி கடலில் வீசினர். இதனால் மீனவர்கள் அதிர்ச்சிக்கு ஆளானார்கள். அதில் இருந்து அவர்கள் மீள்வதற்குள் கடலில் விரித்திருந்த வலைகளையும் இலங்கை கடற்படையினர் வெட்டி சேதப்படுத்தினர்.
இனியும் இங்கிருந்தால் கைது நடவடிக்கைக்கு ஆளாகலாம் என்று பயந்த மீனவர்கள் அவசர, அவசரமாக நள்ளிரவிலேயே கரைக்கு திருப்பினர். இந்த தாக்குதல் ராமேசுவரம் மீனவர்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில் மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜை சந்தித்து நம்பிக்கையுடன் திரும்பிய மீனவ சங்க தலைவர்கள், இருநாட்டு மீனவர்கள் சந்திப்பு விரைவில் நடைபெறும் என எதிர்பார்ப்பில் உள்ள நேரத்தில் தற்போது தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பது திட்டமிட்டபடி பேச்சுவார்த்தை நடைபெறுமா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும், சிறைபிடிக்கப்பட்ட படகுகளை விடுவிக்க கேட்டு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட மீனவர்கள், மத்திய மந்திரியின் சந்திப்புக்கு பிறகு கடந்த சில நாட்களாகத்தான் மீன்பிடிக்க சென்றனர். அதற்குள் இலங்கை கடற்படையின் தாக்குதலுக்கு ஆளாகி இருப்பது அவர்களிடம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. எங்கள் பிரச்சினைக்கு தீர்வு எப்போது என்று கேள்வியுடன் அவர்கள் கண்ணீரில் மிதக்கின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply