32 தமிழர்களை மீட்க 2 வக்கீல்கள் நியமனம்: ஜெயலலிதா நடவடிக்கை

jeyaசென்னையில் இருந்து கடந்த 4-ந்தேதி மாலை கருடாத்திரி எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் திருப்பதி சென்ற 32 தமிழர்கள் ரேணிகுண்டா ரெயில் நிலையத்தில் ஆந்திர போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.32 பேரும் திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டி கடத்துவதற்காக வந்தனர் என்ற சந்தேகத்தின் பேரில் ஆந்திர போலீசார் கைது செய்துள்ளனர்.அவர்களிடம் இருந்து 22 செல்போன்கள், 21 கோடாரிகள், 10 மூட்டை அரிசி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

கைதான 32 பேரும் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தனர். திருப்பதிக்கு சாமி கும்பிட வந்தோம் என்று தெரிவித்தனர். இதை ஏற்க போலீசார் மறுத்து விட்டனர்.

32 பேர் மீதும் ஆந்திர மாநில வன கடத்தல் தடுப்பு சட்டத்தின் கீழ் ஜாமீனில் வரமுடியாத பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

நேற்று பகலில் அவர்களை 2 வேன்களில் ஏற்றி ரேணிகுண்டாவில் இருந்து திருப்பதி கோர்ட்டுக்கு அழைத்துச் சென்று ஆஜர்படுத்தினர். 14 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி விஜயா உத்தரவிட்டார். இதையடுத்து 32 பேரும் சித்தூர் கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டனர்.

கைதானவர்களில் 29 பேர் திருவண்ணாமலை மாவட்டத்தையும், 2 பேர் வேலூர் மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள், ஒருவர் சென்னையைச் சேர்ந்த ஹரிபாபு என்றும் தெரியவந்தது.

இதற்கிடையே 32 தமிழர்கள் கைது செய்யப்பட்டதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் 32 தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆந்திர முதல்- மந்திரி சந்திரபாபுநாயுடுக்கு கடிதம் எழுதினார்.

அவர்கள் ரெயில் பயணிகள்தான். ஆனால் வனக்குற்றங்கள் தொடர்பான சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வனப்பகுதிக்கு அருகில் இல்லாத அவர்கள் மீது எப்படி வனக்குற்றங்கள் தொடர்பாக குற்றம் சாட்ட முடியும் என்று அதில் முதல்- அமைச்சர் ஜெயலலிதா கேள்வி எழுப்பியதுடன் அனைவரையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

32 பேரையும் மீட்பதற்காக ஆந்திர அதிகாரிகளுடன் தொடர்பு கொள்வதற்காக தமிழகத்தில் இருந்து அரசு வக்கீல்கள் 2 பேரையும் தொடர்பு கொள்வதற்காக நியமித்து இருப்பதாகவும் ஜெயலலிதா தெரிவித்து இருந்தார்.

இதைத் தொடர்ந்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவின் பேரில் அரசு வக்கீல்கள் முகமது ரியாஸ், அருள் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஏற்கனவே திருப்பதியில் நடந்த செம்மர கடத்தல் வழக்கில் கைதான 188 தமிழர் களை வாதாடி மீட்டவர்கள்.

தற்போது 32 தமிழர்களை மீட்பதற்காக 2 வக்கீல்களும் மீண்டும் நியமிக்கப்பட்டு உள்ளனர். இருவரும் 32 பேரையும் மீட்கும் நடவடிக்கையை தொடங்கி விட்டனர்.

2 வக்கீல்களும் இன்னும் 2 நாளில் ஆந்திரா செல்கிறார்கள். 32 தமிழர்கள் மீதான வழக்குகள் தொடர்பான விவரங்களை ஆந்திர போலீசாரிடம் பெற்று அதன் அடிப்படையில் ஆந்திர மாநில கோர்ட்டை அணுகி அவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள்.

முன்னதாக 32 தமிழர்களையும் ஜாமீனில் விடுவிக்க கோரி மனுதாக்கல் செய்கிறார்கள்.

32 தமிழர்கள் சார்பில் கோர்ட்டில் ஆஜராகி வாதாடுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply