உயிரிழந்த மாணவர்களின் பெற்றோரிடம் பொலிஸார் தொடர்புகொண்டது சந்தேகத்திற்குறியது :ப.உதயராசா

uthayanயாழ் பல்கலைக்கழக மாணவர்களின் படுகொலையை விபத்தாக காட்ட முனைந்தது யார் ? ப. உதயராசா கேள்வி கடந்த சில தினகளுக்கு முன் இடம்பெற்ற அசம்பாவிதத்தில் பலியான யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் இறப்பை ஆரம்பத்தில் விபத்து என காட்ட முனைந்தது யார் என்ற கேள்வி எமக்குள் எழுந்துள்ளது. ஆண்களுக்கான உந்துருளிகளில் (மோட்டார் சைக்கிள்) மிகவும் வேகத்திறன் குறைந்த உந்துருளியில் சென்ற மாணவர்களை கலைத்துப்பிடித்திருக்கலாம் அல்லது அடுத்திருக்கின்ற காவல் நிலையத்திற்கோ அல்லது வீதியில் கடமையில் நிற்கின்ற காவல்துறையினருக்கோ தகவல் கொடுத்து அவர்களை தடுத்து நிறுத்தியிருக்கலாம் அதைவிடுத்து மாணவர்களை துப்பாக்கியால் சுட்டும் துன்புறுத்தியும் கொலை செய்திருப்பது தமிழர்களின் உயிர்கள் எந்தளவுக்கு இந்த நாட்டில் மதிக்கப்படுகின்றது என்பதனை மீண்டுமொருமுறை வெளிப்படுத்தியிருக்கின்றது.
இவ் உயிரிழப்பில் பாரிய சதி நடந்திருக்கிறது என்பதுடன் அதை மறைக்கவும் முயற்சி எடுக்கப்பட்டுள்ளது என்பது ஆரம்பத்தில் வெளியான செய்திகளில் இருந்து தெரிய வருகின்றது. ஆரம்பத்தில் ஊடகங்களுக்கு இது ஒரு விபத்து மரணமெனவே காட்டப்பட்டது இதை விபத்து மரணமென காட்ட முனைந்தவர்கள் யாரோ அவர்கள்தான் இந்த இறப்பின் சூத்திரதாரிகள். நல்லவேளை சம்பவம் இடம்பெற்ற இடம் யாழ்ப்பாணம் என்பதாலும் யாழ் வைத்திய சாலையில் தமிழ் வைத்தியர்களால் (நேர்மையான /துணிவான ) பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டமையினாலும் இந்த உண்மை சற்று நேரம் கழித்தாவது தெரிய வந்தது. இருப்பினும் இந்த உண்மையின் பின்னணியில் இடம்பெற்ற கைதுகளும் தொடர்ந்து நடைபெறப்போகின்ற விசாரணைகளும் பத்தோடு ஒன்று பதினொன்றாக போகாது என்பற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது.

உயிரிழந்த மாணவர்களின் பெற்றோர்களிடம் காவல்துறையின் உயர்மட்டங்கள் தொடர்பு கொண்டு மரணச்சடங்கிற்கான செலவுகளை தாம் பொறுப்பேற்று நடத்துவதாக கூறியதாகவும், இறந்த மாணவர்களுக்கு சகோதரர்கள் இருந்தால் அவர்களுக்கு அரச வேலை வழங்குவதாகவும் கூறியதாக வெளிவரும் செய்திகள் இந்த சந்தேகத்தை மேலும் வலுவடைய செய்துள்ளது.
எவ்வாறிருப்பினும் திருகோணமையில் இடம்பெற்ற ஐந்து மாணவர்களின் படுகொலை , வித்தியா படுகொலை , கரிஷ்ணவியின் படுகொலைகள் போன்று இவ் வழக்கும் காலப்போக்கில் மறந்து போகின்ற அல்லது இழுத்தடிக்கப்படுகிற வழக்குகளில் ஒன்றாகிவிடுமோ என்பதுதான் எமது அச்சம்.
இனியாவது காவல்துறை உயர்பீடங்களும் சட்டத்துறையினரும் காவல் துறையினரை உசுப்பேற்றும் வகையில் பேசுவதையும் அவர்களுக்கு அளவுகடந்த அதிகார உத்தரவுகளை பிறப்பிப்பதனையும் தவிர்த்துக்கொண்டால் இவ்வாறான தான்தோன்றித்தனமான சம்பவங்களை தவிர்த்துக்கொள்ளலாம்.
நன்றி
ப. உதயராசா
செயலாளர் நாயகம்
சிறி ரெலோ

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply