அமெரிக்காவில் கோர விபத்து டிராக்டர் மீது சுற்றுலா பஸ் மோதியதில் 13 பேர் பலி

201610250240062263_thirteen-killed-31-injured-in-california-tour-bus-crash_secvpfஅமெரிக்காவில் டிராக்டர் மீது சுற்றுலா பஸ் மோதியதில் 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். 31 பயணிகள் படுகாயம் அடைந்தனர். அமெரிக்கர்கள் வார விடுமுறை நாட்களை சுற்றுலா சென்று கேளிக்கை, கொண்டாட்டங்களுடன் கழிப்பது வழக்கம். நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரைச் சேர்ந்த 40–க்கும் மேற்பட்டோர் ‘யு.எஸ்.ஏ. ஹாலிடே பஸ்’ என்ற நிறுவனத்தில் ஒரு சுற்றுலா பஸ்சை அமர்த்தினர். 

 

பின்னர் பால்ம் ஸ்பிரிங்ஸ் நகர் அருகே தெர்மல் என்னும் இடத்தில் உள்ள ‘ரெட் எர்த் கேசினோ’ என்ற புகழ்பெற்ற சூதாட்ட விடுதிக்கு அந்த பஸ்சில் சென்றனர்.

 

டிராக்டர் மீது பயங்கர மோதல்

 

அங்கு பொழுதை போக்கிவிட்டு நேற்று முன்தினம் நள்ளிரவு லாஸ்ஏஞ்சல்ஸ் நகருக்கு திரும்பிக் கொண்டு இருந்தனர். பஸ்சை அதன் உரிமையாளர்களில் ஒருவரே ஓட்டினார். அவர்களது பஸ் மேற்கு மாகாண இணைப்புச் சாலை 10–ன் வழியாக சென்று கொண்டிருந்தது.

 

நேற்று அதிகாலை 5.15 மணி அளவில் பால்ம் ஸ்பிரிங்ஸ் நகர் அருகே அந்த பஸ் சென்றபோது அதற்கு முன்னால் கன்டெய்னர் இணைக்கப்பட்ட ஒரு டிராக்டர் சென்று கொண்டிருந்தது. அப்போது சுற்றுலா பஸ் எதிர்பாராத விதமாக முன்னால் சென்ற டிராக்டரின் கன்டெய்னர் மீது பயங்கரமாக மோதியது. அதே வேகத்தில் கன்டெய்னருக்குள் 15 அடி தூரம் வரை புகுந்ததால் பஸ் பலத்த சேதம் அடைந்தது.

 

13 பேர் பலி

 

இந்த கோர விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கி டிரைவர் உள்பட 13 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். 31 பயணிகள் படுகாயம் அடைந்தனர். விபத்து நடந்தபோது பயணிகளில் பெரும்பாலானவர்கள் அயர்ந்து தூங்கிக்கொண்டு இருந்ததால் பலர் விபத்து நடந்ததே தெரியாத நிலையிலேயே பலத்த காயங்களுடன் உயிர் இழந்துள்ளனர்.

 

சம்பவ இடத்துக்கு உடனடியாக சென்ற அவசர உதவி குழுவினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிகளில் அனுமதித்தனர். இவர்களில் சிலருடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

 

இந்த விபத்து குறித்து, கலிபோர்னியா மாகாண நெடுஞ்சாலை ரோந்து போலீஸ் தலைவர் ஜிம் அபேல் கூறியதாவது:–

 

வேகமாக ஓட்டிய டிரைவர்

 

எனது 35 வருட பணி அனுபவத்தில் இதுபோன்ற சாலை விபத்தை பார்த்தது கிடையாது. விபத்தை ஏற்படுத்திய சுற்றுலா பஸ்சில் அண்மைக்காலமாக எந்த வித தொழில் நுட்ப கோளாறும் இருந்ததாக தெரியவில்லை.

 

பஸ்சை ஓட்டியவர் அதிக அளவில் மது அருந்தி இருந்தாரா என்பது விசாரணைக்கு பின்பே தெரியவரும். எனினும் பஸ்சை டிரைவர் பயங்கர வேகத்தில் ஓட்டி இருக்கிறார் என்பது அறியப்பட்டு உள்ளது. பஸ் விபத்துக்கு உள்ளானது விடிகாலை நேரம் என்பதால் பயணிகளில் பெரும்பாலானவர்கள் கண் அயர்ந்து தூங்கியவாறு வந்துள்ளனர். விபத்து நடந்ததைக் கூட அறியாத நிலையில் பலர் உயிர் இழந்தது வேதனையான ஒன்று.

 

இவ்வாறு அவர் கூறினார்.

 

இந்த விபத்தை தொடர்ந்து மாகாண இணைப்புச் சாலை சுமார் 12 மணி நேரம் மூடப்பட்டது. இதனால் அப்பகுதியில் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டன. பின்னர் வழக்கம்போல் இந்த பாதையில் போக்குவரத்து தொடங்கியது.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply