விமானத்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ.3.5 கோடி பழைய ரூபாய் நோட்டுகள் மாயம்

geldஅரியானா மாநிலம் சிர்சா நகரில் இருந்து நாகாலாந்து மாநிலம் திமாப்பூருக்கு நேற்று காலை ஒரு தனியார் விமானம் புறப்பட்டு சென்றது. அந்த விமானத்தில் ஏராளமான சிறு, சிறு பெட்டிகள் ஏற்றிக் கொண்டு செல்லப்பட்டன.இந்த நிலையில் நாகாலாந்து செல்லும் ஜெட் விமானத்தில் கோடிக்கணக்கில் பணம் கடத்தப்படுவதாக மத்திய உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே உளவுத்துறையினர் திமாப்பூரில் உள்ள வருமான வரித் துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து உஷார்படுத்தினார்கள்.

இதையடுத்து அந்த தனியார் ஜெட் விமானம் திமாப்பூர் வந்து அடைந்ததும் மத்திய தொழில் பாதுகாப்புப்படை வீரர்கள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது விமானத்தில் கொண்டு வரப்பட்ட சிறு, சிறு பெட்டிகளில் பழைய செல்லாத ரூ.500 நோட்டுகள் கட்டு, கட்டாக இருப்பது தெரியவந்தது.

அந்த பணத்தை கணக்கிட்ட போது அதில் ரூ.3.5 கோடிக்கு பழைய ரூ.500 நோட்டுகள் இருப்பது தெரிந்தது.

இதையடுத்து அந்த ரூபாய் நோட்டுகளுடன் வந்தவரிடம் மத்திய தொழில் பாதுகாப்புப் படை அதிகாரிகளும், வருமானவரி துறை அதிகாரிகளும் தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்போது ரூ.3.5 கோடியை கொண்டு வந்தது தொழில் அதிபர் அமர்ஜித்குமார்சிங் என்று தெரியவந்தது.

பீகார் மாநிலம் முஸ்கேர் மாவட்டத்தை சேர்ந்த அவரிடம், இவ்வளவு பழைய ரூபாய் நோட்டுகள் யாருடையது? எதற்காக அரியானாவில் இருந்து நாகாலாந்துக்கு கொண்டு வந்தீர்கள்? என்று அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அதற்கு அமர்ஜித்சிங்குமார், இந்த ரூபாய் நோட்டுகள் அனைத்தும் டெல்லியில் உள்ள ஒரு பிரபல அரசியல்வாதிக்கு சொந்தமானது என்று கூறினார்.

இதற்கிடையே ஒரு பக்கம் விசாரணை நீடித்த நிலையில் ரூ.3.5 கோடி மதிப்புள்ள பழைய ரூ.500 நோட்டுகள் அனைத்தும் திடீரென மாயமாகி விட்டது. அந்த பணத்தை எடுத்துச் சென்றது யார் என்று தெரியவில்லை.

வருமானவரி துறை அதிகாரிகளும், மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்களும் இதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். சில மணி நேரத்துக்குள் அந்த பணம் யாருக்கு சொந்தமானது என்பது அதிகாரிகளுக்கு தெரியவந்தது. அதன்பிறகு அவர்கள் எந்த தகவலையும் வெளியிடாமல் மவுனமாகி விட்டனர்.

நாகாலாந்து மாநிலத்தை சேர்ந்த இளம் தொழில்அதிபரான அனடோ பெயர், இந்த பண விவகாரத்தில் அடிபடுகிறது. இவர் மறைந்த பாராளுமன்ற மேல்-சபை எம்.பி.யான கெசிகோ சிமோமியின் மகன் ஆவார்.

அதுபோல நாகாலாந்து முன்னாள் முதல்-மந்திரி நெயிபூய் ரியோவின் மருமகனும், தொழில்அதிபரும் தற்போதைய நாகா எம்.பி.யு மான ரியோவின் பெயரும் இந்த பண விவகாரத்துடன் தொடர்புப்படுத்தி பேசப்படுகிறது. நாகாலாந்து மக்கள் கூட்டணியின் எம்.பி.யான இவர் நாகாலாந்து மாநிலத்தில் இருந்து தேர்வான ஒரே எம்.பி. ஆவார்.

பா.ஜ.க.வின் ஆதரவு பெற்ற இந்த எம்.பி. டெல்லியின் பெரிய அரசியல்வாதி ஒருவருடன் நெருக்கமாக இருப்பவர். இதனால் ரூ.3.5 கோடி மதிப்புள்ள பழைய ரூ.500 நோட்டுகள் விவகாரம் பற்றி அதிகாரிகள் எந்த தகவலையும் வெளியிட மறுக்கிறார்கள்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply