பாகிஸ்தானுக்கு பதிலடி இந்திய ராணுவம் ஆவேச தாக்குதல் பொதுமக்கள் 9 பேர் பலியானதாக பாகிஸ்தான் அலறல்

indian armyகாஷ்மீரில் வீரர்கள் 3 பேரை சுட்டுக்கொன்ற பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது. இதில் பொதுமக்கள் 9 பேர் பலியானதாக பாகிஸ்தான் அலறி உள்ளது. காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் எல்லை கட்டுப்பாட்டு கோடு, சர்வதேச எல்லைப் பகுதிகளில் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.

 

நேற்று முன்தினம், காஷ்மீரின் மச்சல் செக்டாரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் மீது பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் சிலர் மறைந்திருந்து தாக்குதல் நடத்தினர். பாகிஸ்தான் ராணுவ உதவியுடன் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 3 வீரர்கள் கொல்லப்பட்டனர். ஒரு வீரரின் உடலை பயங்கரவாதிகள் சிதைத்தனர்.

 

இந்தியா ஆவேசம்

 

கோழைத்தனமான பாகிஸ்தானின் இந்த செயலுக்கு பழிக்குப் பழி வாங்க சபதம் எடுத்த இந்திய வீரர்கள் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே உள்ள பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீது நேற்று முன்தினம் இரவு ஆவேச தாக்குதல் நடத்தினர்.

 

சிறிய வகை பீரங்கி, தானியங்கி எந்திர துப்பாக்கிகள் ஆகியவற்றின் மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பாகிஸ்தான் ராணுவ நிலைகள் பல சின்னாபின்னமாயின.

 

எனினும், தனக்கு ஏற்பட்ட சேதத்தை ஒப்புக் கொள்ளாத பாகிஸ்தான், இந்தியா நடத்திய தாக்குதலில் தங்களது எல்லையோர கிராமங்கள் சேதம் அடைந்ததாக கூறி உள்ளது.

 

இதைத்தொடர்ந்து காஷ்மீரில் பிம்பர், கிருஷ்ணா காட்டி, நவ்ஷெரா செக்டார் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி நேற்று தாக்குதல் நடத்தியது. குறிப்பாக, ரஜோரி மாவட்டத்தின் பிம்பர் செக்டாரில் நேற்று காலை 9.45 மணி அளவில் தீவிர தாக்குதலில் ஈடுபட்டது. இதில் 2 இந்திய வீரர்கள் லேசான காயம் அடைந்தனர்.

 

சண்டை நீடிப்பு

 

பாகிஸ்தானின் இந்த தாக்குதலுக்கும் இந்திய ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்தது. இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது.

 

இதுபற்றி ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில், “பாகிஸ்தானின் கோழைத்தனமான செயலுக்கு சரியான பதிலடி கொடுக்கப்பட்டது” என்றார்.

 

இதற்கிடையே, இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதில், பீரங்கி குண்டுகளால் படுகாயம் அடைந்த தனது நாட்டின் எல்லையோர பொது மக்கள் 9 பேர் பலியானதாகவும், 11 பேர் படுகாயம் அடைந்து இருப்பதாகவும் பாகிஸ்தான் அலறி உள்ளது. பொதுமக்கள் பயணம் செய்த பஸ், ஆம்புலன்ஸ்களை குறிவைத்து இந்தியா நடத்திய தாக்குதலில் இவர்கள் பலியானதாக பாகிஸ்தான் கூறி உள்ளது.

 

போருக்கு தயாராகவேண்டும்

 

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவது குறித்து, பா.ஜனதா தலைவர்களில் ஒருவரும், எம்.பி.யுமான சுப்பிரமணியசாமி நேற்று டெல்லியில் நிருபர்களிடம் கூறுகையில் “பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா போருக்கு தயாராகவேண்டும்” என்றார்.

 

அவர் மேலும் கூறும்போது, “மேற்கு எல்லைப்பகுதியில் நமக்கு தொடர்ந்து தொல்லை அளித்து வரும் அண்டை நாட்டின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண இதுதான் சரியான நேரம். போரை விட்டால் நமக்கு வேறு வாய்ப்பு இல்லை. இந்தியா தாக்குதல் நடத்தினால் பாகிஸ்தான் துண்டு துண்டாகிப் போகும்” என்றார்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply