பிணைக்காக அல்ல அரசின் அடக்குமுறைக்கு எதிராகவே விமல் உண்ணாவிரதப் போராட்டம்!

பிணைக்காக அல்ல அரசின் அடக்குமுறைக்கு எதிராகவே விமல் உண்ணாவிரதப் போராட்டம்! – அவரைப் பார்வையிட்ட பின் மஹிந்த அணி குற்றச்சாட்டு “பிணையைப் பெறுவதற்கு அல்ல, இந்த நாட்டில் தலைதூக்கியுள்ள அரசின் பாரிய அடக்குமுறைக்கு எதிராகவே விமல் வீரவன்ச உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுக்கின்றார்.”  இவ்வாறு மஹிந்த அணியான பொது எதிரணி தெரிவித்தது.
அரச சொத்துக்களை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவை மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பொது எதிரணியினர் நேற்று நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.
தமக்குப் பிணை வழங்காமல் இருப்பதற்கு மேல் நீதிமன்றம் தீர்மானத்துள்ளமைக்கு எதிராக வெலிக்கடை சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விமல் வீரவன்ச நேற்றுமுன்தினம் சிறைச்சாலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார்.
விமல் வீரவன்சவைப் பார்வையிடுவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, உதய கம்மன்பில, மஹிந்த யாப்பா அபேவர்தன உள்ளிட்ட பொது எதிரணி உறுப்பினர்கள் நேற்று வெலிக்கடை சிறைச்சாலைக்கு நேரடியாக விஜயம் செய்திருந்தனர்.
இதனையடுத்து ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட உதய கம்மன்பில எம்.பி.,
“அரசின் அடக்குமுறைக்கு எதிராகவே இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை விமல் வீரவன்ச முன்னெடுப்பதாகக் கூறியுள்ளார்.
தான் இந்தப் போராட்டத்தை முன்னெடுப்பது பிணையைப் பெறுவதற்கு அல்லவென்பதை ஊடகங்களுக்கு விமல் வீரவன்ச கூறச் சொன்னார். பிணை வழங்குவது என்ற விடயம் நீதிமன்றச் செயற்பாடாகும். இந்த நாட்டில் தலைதூக்கியுள்ள அரசின் பாரிய அடக்குமுறைக்கு எதிராகவே விமல் வீரவன்ச இந்தப் புரட்சியை செய்கின்றார்.
ஒரு பக்கம் நாட்டைப் பிரிக்கும் கிளர்ச்சி இடம்பெறுகின்றது மறுபுறம் 1988, 1989களில் இருந்த மோசமான யுகத்தை நோக்கி நாடு பயணிக்கின்றது. அன்று ஜே.ஆர்.ஜயவர்தன தொழிற்சங்களில் கைவைத்தார். அடுத்ததாக மாணவர்கள் மீது, அடுத்ததாக வைத்தியர்கள் மீது, அடுத்ததாக எதிர்க்கட்சி மீது, அடுத்ததாக ஊடகவிலாளர்கள் மீது, இறுதியாக அனைத்து மக்கள் மீதும் கைவைத்தனர். ஆயுததாரிகள் இலக்கத் தகடுகள் அற்ற வாகனங்களில் வந்து முழு நாட்டையும் கடத்திச் செல்லும் மோசமான யுகம் வந்தது. அன்று மக்களைப் பாதுகாப்பதற்கு யாராலும் முடியாமல்போனது. ஆகவே, இந்த அடக்குமுறை தொடர்பில் மக்களுக்குத் தெளிவுபடுத்துவதற்காகவே இந்தப் புரட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது” – என்றார்.
இதேவேளை, விமல் வீரவன்சவின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவதே அரசின் நோக்கம் என்று நாடாளுமன்ற உறுப்பினரான மஹிந்த யாப்பா அபேவர்தன குற்றஞ்சாட்டியுள்ளார்.
“இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகவே அவரை இவ்வாறு அரச தரப்பினர் நடத்துகின்றனர் என நாம் கருதுகின்றோம். மிகவும் கவலைக்குரிய விடயம். மிகவும் வேதனைக்குரிய விடயம். இவ்வாறான பழிவாங்கும் ஊழல் அரசு இந்த நாட்டின் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் செயற்படுகின்றது” – என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply