நாட்டில் நாய்களுக்கு இருக்கின்ற மரியாதைகூட எமக்கு இல்லை! : கேப்பாப்பிலவு மக்கள்

நாட்டில் நாய்களுக்கு இருக்கின்ற மரியாதைகூட எமக்கு இல்லை! – ஒரு வாரத்துக்குள் தீர்வைத் தரவேண்டும் என்று கேப்பாப்பிலவு மக்கள் வலியுறுத்து .“வெய்யிலின் கொடுமையாலும், நுளம்புகளின் தாக்கத்தாலும் குழந்தைகள் நோய்த்தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்கள். எங்கள் நியாயமான கோரிக்கைக்கு நல்லாட்சி அரசு தகுந்த பதிலைத் தராது எங்களை மேலும் துன்பகரமான நிலைக்கு இட்டுச் செல்லுகின்றது. இந்த நாட்டில் நாய்களுக்கு இருக்கும் மதிப்பும் மரியாதையும் எங்களைப்போல் நிலைத்துக்காகப் போராடிவரும் மக்களுக்கு இல்லை என்பது தெளிவாகத் தெரிகின்றது.”

இவ்வாறு கேப்பாப்பிலவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்கள் தெரிவித்தனர்.
“எங்கள் போராட்டத்துக்கு மக்கள் பிரதிநிதிகள் உரிய தீர்வுகளைப் பெற்றுத்தரத் தவறின் எங்கள் போராட்டத்தை வலுச்சேர்க்கும் முகமாக அடுத்தகட்ட அஹிம்சைப் போராட்டத்தை முன்னெடுக்கும் நிலைக்குத் தள்ளப்படுவோம். ஒரு வாரத்துக்குள் எமக்கு நல்ல செய்தி பெற்றுத் தரவேண்டும்” என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
இராணுவத்தினர் ஆக்கிரமித்து வைத்திருக்கும் தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி கடந்த 27 நாட்களாகத் தொடர் அமைதிவழிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் மண்மீட்புப் போராட்டத்துக்கு மக்கள் பிரதிநிதிகள், பல்கலைக்கழக சமூகத்தினர், பாடசாலை சமூகத்தினர் மற்றும் சிவில் அமைப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
“கடந்த எட்டு வருடங்களுக்கு மேலாக நாங்கள் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். எங்கள் காணிகளை விடுப்பதற்கான எத்தகைய ஆக்கபூர்வமான நடடிவடிக்கைகளையும் மக்கள் பிரதிநிதிகள் எடுத்ததாகத் தெரியவில்லை. மக்கள் பிரதிநிதிகள் எமக்கு நல்ல முடிவைப் பெற்றுத்தர வேண்டும். தவறின் எங்கள் போராட்டத்துக்கு வலுச் சேர்க்கும் முகமாக அடுத்தகட்ட அஹிம்சைப் போராட்டத்தை முன்னெடுக்கும் நிலைக்குத் தள்ளப்படுவோம். ஒரு கிழமைக்குள் எமக்கு நல்ல செய்தி பெற்றுத்தர வேண்டும்” என்று தொடர் அமைதிவழிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாப்பிலவு மக்கள் தெரிவித்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply