வளைகுடா ஒற்றுமை அவசியம் சவுதி மன்னரிடம் தொலைபேசியில் வலியுறுத்திய : ட்ரம்ப்

கத்தாருடனான ராஜாங்க உறவை முறித்துக்கொள்வதாக சவுதி உள்ளிட்ட 4 நாடுகள் அறிவித்துள்ள நிலையில் பயங்கரவாதத்தை ஒழிக்கவும் வளைகுடா பிராந்திய ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தவும் அரபு நாடுகளின் ஒற்றுமை அவசியம் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.அண்மையில், இஸ்லாமியக் குழுக்களுக்கு கத்தார் ஆதரவு தெரிவிப்பதால் அந்நாட்டுடனான தங்கள் ராஜாங்க உறவுகளைத் துண்டித்துக் கொள்வதாக சவுதி அரேபியா, பஹ்ரைன், எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 4 அரபு நாடுகளும் அறிவித்தன.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சவுதி அரேபியாவின் மன்னர் சல்மானை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

இந்தத் தொலைபேசி உரையாடல் குறித்து வெள்ளை மாளிகை தரப்பில், “பயங்கரவாதத்தை ஒழிக்கவும் பிராந்திய ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தவும் வளைகுடா நாடுகளின் ஒற்றுமை அவசியம் என்பதை அதிபர் ட்ரம்ப் சவுதி மன்னரிடம் எடுத்துரைத்தார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் கத்தாருடனான ராஜாங்க உறவைத் துண்டிப்பதாக அரபு நாடுகள் அறிவித்ததை வரவேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிபர் ட்ரம்பின் சமாதான முயற்சி குறித்து வெள்ளை மாளிகை செய்தித்துறை செயலர் சீன் ஸ்பைஸர் கூறும்போது, “வளைகுடா பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு சுமுக தீர்வு காணும் வகையில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் அமெரிக்கா ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. அங்கு மீண்டும் ஒற்றுமையை ஏற்படுத்தினால் மட்டுமே பிராந்திய பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என்பதால் ஒற்றுமையை ஏற்படுத்த அமெரிக்கா முயற்சித்துவருகிறது.

பயங்கரவாத குழுக்களுக்கு நிதியுதவி அளிக்கப்படுவதை முடுக்குவதற்கு அதிபர் ட்ரம்ப் வகுத்துள்ள கொள்கைகளுக்கு ஏற்ப இப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு ஏற்படுத்தி பதற்றத்தை தவிர்க்க வேண்டும் என்றே அமெரிக்கா விரும்புகிறது” என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply