அமெரிக்காவின் பொருளாதார தடை, முழு அளவிலான வணிகப் போர் ரஷியா ஆவேசம்

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் 8–ந் தேதி நடந்த ஜனாதிபதி தேர்தலில், ரஷியா நேரடியாக தலையிட்டு ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் தோற்கவும், ரஷிய ஆதரவாளரான டிரம்ப் வெற்றி பெறவும் துணை நின்றது என்று குற்றம் சாட்டப்படுகிறது. மேலும், உக்ரைனின் ஒரு அங்கமாக திகழ்ந்த கிரிமியாவை தனது அங்கமாக ரஷியா சேர்த்துக்கொண்டது என்றும் குற்றச்சாட்டு எழுந்து இருக்கிறது.

 

இந்த குற்றச்சாட்டுகளின் காரணமாக ரஷியா மீது புதிய பொருளாதார தடைகளை விதிக்க உகந்த சட்ட மசோதாவை அமெரிக்க பாராளுமன்றத்தின் இரு சபைகளும் சமீபத்தில் ஏகோபித்த ஆதரவுடன் நிறைவேற்றின.

 

இந்த மசோதா ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு வரும் ஈரான், வடகொரியா ஆகிய நாடுகள் மீது தடை விதிக்கவும் வகை செய்துள்ளது.

 

ரஷியா ஆத்திரம்

 

அமெரிக்க பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் பொருளாதார தடை மசோதா நிறைவேற்றப்பட்டது, ரஷியாவுக்கு மிகுந்த ஆத்திரத்தை ஏற்படுத்தியது. உடனடியாக தங்கள் நாட்டில் உள்ள அமெரிக்க தூதரகம், துணைத்தூதரகங்களில் பணியாற்றுகிற அதிகாரிகள், ஊழியர்களின் எண்ணிக்கையை 755 ஆக குறைக்க வேண்டும் என ரஷியா உத்தரவிட்டது.

 

மேலும், மாஸ்கோ அருகில் அமெரிக்க தூதரகத்தினரால் பயன்படுத்தப்பட்டு வந்த 2 ரஷிய சொத்துகளை தொடர்ந்து பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டது.

 

டிரம்ப் கையெழுத்து

 

இந்த நிலையில், ரஷியா, ஈரான், வடகொரியா ஆகிய 3 நாடுகள் மீதும் புதிய பொருளாதார தடைவிதிக்க வகை செய்யும் சட்ட மசோதாவில் ஜனாதிபதி டிரம்ப் நேற்று முன்தினம் பூட்டிய அறைக்குள் வைத்து கையெழுத்திட்டு சட்டம் ஆக்கி அது அமலுக்கு வந்துள்ளது.

 

வழக்கமாக இதுபோன்ற சமயங்களில், நிர்வாக உத்தரவுகள் பிறப்பிக்கிறபோது டிரம்ப் ஆரவாரமாக காணப்படுவது உண்டு. ஆனால் இம்முறை அப்படி இல்லை.

 

டிரம்ப் சாடல்

 

இருப்பினும் பொருளாதார தடை மசோதாவை சட்டம் ஆக்கியது தொடர்பாக அவர் ஒரு அறிக்கை வெளியிட்டார்.

 

அந்த அறிக்கையில் அவர், வெளியுறவு கொள்கையை வடிவமைக்கும் தனது அதிகாரங்களை அமெரிக்க பாராளுமன்றம் மீறுவதின் அளவை சாடி உள்ளார். பாராளுமன்றம் சாதிப்பதை விட, தன்னால் பிற நாட்டு அரசுகளுடன் சிறப்பான உடன்பாடுகளை செய்ய முடியும் என கூறி உள்ளார்.

 

அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அவர் ஒரு செய்தியும் விடுத்துள்ளார்.

 

அந்தச் செய்தியில் அவர், ‘‘ஈரான், வடகொரியா மற்றும் ரஷியா ஆகியவற்றின் ஆக்கிரமிப்பு, சீர்குலைக்கும் நடத்தைகளை தீர்ப்பதற்கு கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு நான் சாதகமாக இருந்தாலும்கூட, இந்த சட்டம் கணிசமான குறைபாடுகளை கொண்டுள்ளது’’ என்று கூறி உள்ளார்.

 

ரஷியா ஆவேசம்

 

அமெரிக்காவின் புதிய பொருளாதார தடை, ரஷியாவுக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக அந்த நாட்டின் பிரதமர் டிமிட்ரி மெத்வடேவ் தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.

 

அதில் அவர், ‘‘ரஷியா மீதான அமெரிக்காவின் புதிய பொருளாதார தடை, ரஷியாவுக்கு எதிரான முழு அளவிலான வணிகப்போர்தான். இது டிரம்ப் நிர்வாகத்தின் முழுமையான அதிகாரமற்ற தன்மையை எடுத்துக்காட்டுகிறது. அமெரிக்காவின் புதிய நிர்வாகத்துடனான எங்கள் உறவு மேம்படும் என்று நாங்கள் கொண்டிருந்த நம்பிக்கை முடிவுக்கு வந்துவிட்டது’’ என ஆவேசத்துடன் கூறி உள்ளார்.

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply