பிரதமர் பதவியில் இருந்து தகுதி நீக்கம்: நவாஸ் ஷெரீப் மறுஆய்வு மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
உலக அரசியல் தலைவர்கள், நடிகர்கள், தொழிலதிபர்கள் பலர், வருவாய்க்கு அதிகமாக சேர்த்த பணத்தை பனாமா நாட்டில் பதுக்கி உள்ளதாக தகவல் வெளியானது. ‘பனாமா பேப்பர்ஸ்’ என்ற பெயரில் வெளியான ஆவணங்களில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் (67), அவரது குடும்பத்தினர் மீதும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இதுதொடர்பான வழக்கை பாகிஸ்தான் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆசிப் சயீத் கோசா தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்தது. இதில் நாடாளுமன்றத்துக்கு நவாஸ் ஷெரீப் நேர்மையாக நடந்து கொள்ளவில்லை. அவர் பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று கடந்த ஜூலை மாதம் 28-ம் தேதி தீர்ப்பளித்தது. இதையடுத்து அவர் பதவி விலகினார்.
எனினும், தீர்ப்பை மறு ஆய்வு செய்ய கோரி நவாஸ் ஷெரீப் உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது நேற்று மீண்டும் விசாரணை நடந்தது. அப்போது நவாஸ் ஷெரீப் மனுவை தள்ளுபடி செய்வதாக தலைமை நீதிபதி கோசா அறிவித்தார். காரணம் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையில் ஷெரீப், அவரது குடும்பத்தினர், முன்னாள் அமைச்சர் தர் ஆகியோருக்கு எதிரான ஊழல் வழக்குகளில் விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் 19-ம் தேதி ஆஜராக ஷெரீப்புக்கு தேசிய பொறுப்பேற்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply