ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவ மந்திரி விமானத்தை சுட்டு வீழ்த்த முயற்சி

அமெரிக்க ராணுவ மந்திரி ஜிம்மேட்டில் இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விட்டு ஆப்கானிஸ்தான் சென்றார். தலைநகரம் காபூலில் உள்ள விமான நிலையத்தில் அவர் தரை இறங்கினார். சிறிது நேரத்தில் விமான நிலையத்தை நோக்கி தீவிரவாதிகள் ராக்கெட் மற்றும் சிறிய ரக ஏவுகணைகளை வீசினார்கள். இதில், அவை வெடித்து சிதறின.

ஆனால், ஜிம்மேட்டில் முன்கூட்டியே தரை இறங்கி அந்த இடத்தை கடந்து சென்று விட்டார். இதனால் அவருக்கோ, விமானத்துக்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

தீவிரவாதிகள் வீசிய குண்டில் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டு இருந்த 2 அமெரிக்க போர் விமானம், ஒரு ஆப்கானிஸ்தான் போர் விமானம், ஒரு பயணிகள் விமானம் ஆகியவை சேதம் அடைந்தன.

மேலும் அவர்கள் வீசிய குண்டு ஒன்று பொது மக்கள் இருந்த இடத்தில் விழுந்தது. இதில், ஒரு பெண் பலியானார். 11 பேர் காயம் அடைந்தனர்.

இந்த தாக்குதல் நடந்ததும் அமெரிக்க போர் விமானங்கள் தீவிரவாதிகள் பதுங்கி இருந்த இடத்தில் 2 ஏவுகணைகளை வீசின. அதில், ஒரு ஏவுகணை தவறுதலாக பொது மக்கள் குடியிருப்பில் விழுந்தது. இதில் 10-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.

இந்த தாக்குதலுக்கு தலிபான்கள், ஐ.எஸ். தீவிரவாதிகள் இருதரப்பினரும் பொறுப்பேற்றுள்ளனர். ஜிம்மேட்டில் விமானத்தை சுட்டு வீழ்த்துவதற்காகத்தான் இந்த தாக்குதலை நடத்தியதாக அவர்கள் கூறினார்கள்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply