தடைகளை மீறி தமிழர்களுக்கான நினைவேந்தல் நடந்தே தீரும் : வைகோ அறிவிப்பு

அரசு சார்பில் எத்துணை தடைகள் உண்டாக்கப்பட்டாலும் அவை எல்லாவற்றையும் மீறி ஈழத்தில் சிங்கள பேரினவாத அரசால் கொல்லப்பட்ட தமிழர்களுக்கான நினைவேந்தல் நிகழ்ச்சி இன்று சென்னை மெரினா கடற்கரையில் நடந்தே தீருமென அறிவித்துள்ளார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.

கடந்த 2009 ஆம் ஆண்டு இலங்கையில், நெடுங்காலமாக தங்களது தார்மீக உரிமையான ஈழம் கோரி அற வழியிலும், ஆயுத வழியிலும் போராடிய தமிழர்கள் மீது சிங்கள பேரினவாத அரசால் பாரிய அளவிலான அரச வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. அப்போது பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட இலட்சக்கணக்கிலான தமிழர்கள் கொன்றொழிக்கப்பட்டனர். இறுதி கட்ட போரின் போது அநியாயமாக கொல்லப்பட்ட தமிழ் மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வண்ணம் ஆண்டுதோறும் மே மாதத்தில் உலகு முழுவதும் தமிழ் மக்கள் வசிக்கும் இடங்களில் நினைவேந்தல் நிகழ்ச்சிகள் நடைபெறும்.

அந்த வகையில், ஆண்டுதோறும் சென்னை மெரினா கடற்கரையில் மே 17 இயக்கத்தின் சார்பில் தமிழர் படுகொலைக்கான நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெறும். இவ்வருடமும் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெறுமென அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு தடை விதித்துள்ளது சென்னை மாநகர காவல்துறை.

இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த வைகோ, “தமிழர் தாயகமாம் தமிழகத்திலேயே கொன்றொழிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு அஞ்சலி செலுத்த அனுமதி மறுப்பது ஏற்றுக்கொள்ளவே முடியாத செயல். அரசு சார்பில் எத்துணை தடைகள் உண்டாக்கப்பட்டாலும் அவை எல்லாவற்றையும் மீறி ஈழத்தில் சிங்கள பேரினவாத அரசால் கொல்லப்பட்ட தமிழர்களுக்கான நினைவேந்தல் நிகழ்ச்சி தமிழர் கடலாம் மெரினாவில் நடந்தே தீரும்” என தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply