அதிகார பகிர்வை மையப்படுத்திய புதிய அரசியல் யாப்பை இந்த அரசாங்கம் வழங்கப்போவதில்லை: அனந்தி சசிதரன்
அதிகாரப் பகிர்வை மையப்படுத்திய புதிய அரசியல் யாப்பை மைத்திரி – ரணில் அரசாங்கம் வழங்க போவதில்லை என வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். அனந்தி சசிதரன் தலைமையில் இன்று ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சி ஒன்று யாழ்ப்பாணத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் உரையாற்றிய போதே வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“வடக்கு கிழக்கில் மிக நீண்ட காலமாக வாழ்ந்து வரும் தமிழ் மக்களின் மீதான ஒடுக்குமுறைகளை இல்லாதொழித்து, அவர்களின் தேசிய அரசியல் அபிலாஷைகளை உருவாக்குவதே எமது நோக்கம்.
தங்களைத் தாங்களே ஆளும் சுயநிர்ணயத்துடன் கூடிய அதிகபட்ச சுயாட்சியினை வென்றெடுப்பதே எமது பிரதான அரசியல் நோக்கமாகும்.
வடக்கு கிழக்கு முஸ்லிம் மக்களின் உரிமைகள், தமிழர்களின் பிரச்சினைகள் மற்றும் மலையகத் தமிழர்களின் பிரச்சினைகள் போன்றவற்றை உள்ளடக்கிய நிகழ்ச்சி நிரலைக் கொண்டே எமது கட்சி செயற்படும்.
அத்துடன் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் மற்றும் ஒடுக்கப்படும் தமிழ் மக்களது கலாசார பண்பாட்டு அம்சங்கள் தொடர்பாகவும் நாம் எமது செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளோம்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply