ஜமால் கஷோக்கி கொலை தொடர்பில் சவுதி உண்மையை வெளிக்கொணர வேண்டும் : விக்கிரமபாகு கருணாரட்ன
சவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் சவுதி அரசாங்கம் உண்மைகளை வெளிக்கொண்டு வரவேண்டுமென இலங்கை சமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளரான கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன வலியுறுத்தியுள்ளார்.
இப்படுகொலைக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, கொழும்பில் அமைந்துள்ள சவுதி தூதரகத்துக்கு முன்னாள் இன்று (வியாழக்கிழமை) ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.
தொழிற்சார் இணைய ஊடகவியலாளர் சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், அரசியல் ஆய்வாளர்கள், சமூக அமைப்பினர், தேசிய- சர்வதேச ஊடகவியலாளர்கள என பலரும் கலந்து கொண்டு தமது கண்டனத்தை பதிவு செய்தனர்.
இதன்போது, ஆதவனுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், “ஜமான் கஷோக்கி எனும் ஊடகவியலாளர், சவுதி அரேபிய அரசாங்கத்தால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
அவரை கொலை செய்தது மட்டுமன்றி, அவரின் உடலை துண்டுகளாக்கி தடையங்களை அழிக்கவும் சவுதி முயற்சி செய்துள்ளது.
இது ஒரு பாரிய குற்றமாகும். இந்த விவகாரம் பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் இவ்விடயத்தில் நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என தற்போது வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், சவுதி இளவரசர் சல்மான், இந்த விடயம் தங்களுக்கும் கவலையளிக்கிறது என கூறியுள்ளார். ஆனால், அவர் அனுதாபம் தெரிவிப்பதைவிடுத்து இந்த விடயத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இன்று அனைவரதும் கோரிக்கையாக இருக்கிறது.
யார் இவரை கொலை செய்தது என்பதை ஆராய்ந்து, குற்றவாளியை தெரியப்படுத்த வேண்டும். இதுதான் உங்களின் கடமையும் ஆகும். இல்லாவிட்டால், சவுதியே இந்த விவகாரத்தில் குற்றவாளியாக கருதப்படும்” என்று தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply